ஹரியானாவில் இரு நாய்களுக்குத் திருமணம் செய்த விநோதமான சம்பவம், தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஹரியானா குருகிராம் பகுதியைச் சேர்ந்த இரு அண்டை வீட்டார் தங்களின் `ஷெரூ மற்றும் ஸ்வீட்டி’ என்ற வளர்ப்பு நாய்களுக்குத் திருமணம் செய்து வைத்துள்ளனர். அதாவது, இந்து சம்பிரதாய முறைப்படி திருமணத்தை நடத்தியுள்ளனர். மனிதர்களுக்கு எப்படி நடத்துவார்களோ அப்படியே நாய்களுக்கும் திருமணத்தை நடத்தியுள்ளனர்.
பாரம்பர்ய முறைப்படி ஓமகுண்டத்தை 7 முறை சுற்றி வரும் `pheras’ என்ற சடங்கையும், குடும்ப உறுப்பினர்கள் மணமகன் மற்றும் மணமகளுக்கு ஹல்டி (மஞ்சள்) பூசும் சடங்கையும், செய்துள்ளனர்.
இந்தத் திருமணத்தைக் காண சுமார் 100 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாய்களின் திருமணத்தைக் காண அங்கே கூட்டம் களைகட்டியது. தோரணங்கள் கட்டி, நாய்களுக்கு ஆபரணங்கள் அணிவித்து, வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது.
இத்திருமணம் குறித்து ஸ்வீட்டியின் உரிமையாளர் கூறுகையில், “ஸ்வீட்டி 3 வருடங்களுக்கு முன் எங்களுக்குக் கிடைத்தாள். ஷெரூவின் உரிமையாளர் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.
எல்லோரும் எங்கள் இரு நாய்களுக்கும் திருமணம் செய்து வைக்கக் கூறினர். ஷெரூவின் உரிமையாளரும் இதற்கு ஒப்புக் கொண்டார். மஞ்சள் பூசும் விழாவில் 200 முதல் 300 பெண்கள் வரை பங்கேற்றனர்.
எனக்குக் குழந்தைகள் இல்லை, அதனால் இது போன்ற விழாக்கள் வீட்டில் நடைபெற்றதில்லை. இதன் மூலம் என்னுடைய குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைப்பதைப் போல உணர்கிறேன். ஷெரூவின் உரிமையாளரும் எங்களை விட்டுச் செல்ல மாட்டோம் என உறுதி அளித்துள்ளனர்’’ எனத் தெரிவித்துள்ளார். ஷெரூவின் உரிமையாளர் கூறுகையில், ஷெரூவை தங்களின் மகன் போலப் பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
திருவிழாவைப் போல நடைபெற்ற இந்தத் திருமணம், தற்போது அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது.