செல்லப்பிராணிகளான நாய்களின் விசுவாசத்துக்கு அளவே இருக்காது. தன்னை வளர்த்த உரிமையாளரின் இக்கட்டான சூழ்நிலையில் அவர்களை காப்பாற்றும் நாய்களின் நன்றியுணர்வுக்கு மற்றொரு சாட்சியாக அமைந்திருக்கிறது கர்நாடகாவில் நடந்த சம்பவம்.
அடர்ந்த காட்டுக்குள் விறகு எடுக்கச் சென்ற தனது உரிமையாளர் வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பாத நிலையில், டாமி என்ற அவரது நாய் அவரை கண்டுபிடித்திருக்கிறது. கர்நாடகாவின் ஷிவமோகா மாவட்டத்தின் ஹொசநகர் தாலுகாவில் உள்ள சுதுரு கிராமத்தைச் சேர்ந்தவர் ஷேகரப்பா என்ற 55 வயது முதியவர்.
இவர் அதேப் பகுதியில் உள்ள காட்டுக்கு தினமும் காலை 6 மணிக்கு விறகு எடுக்க செல்வதை கடந்த 10 ஆண்டுகளாக வழக்கமாக கொண்டிருக்கிறார். இப்படியாக கடந்த நவம்பர் 12ம் தேதி ஷேகரப்பா அடர்ந்த காட்டுக்குள் சென்றிருக்கிறார். பொதுவாக காலை 10 மணிக்குள் வீடு திரும்பி, ஐயனூரு டவுனில் உள்ள ஹோட்டலுக்கு பணியாற்ற செல்வாராம்.
ஆனால் சம்பவம் நடந்த நாளன்று வெகு நேரமாகியும் ஷேகரப்பா வீடு திரும்பாததால் குடும்பத்தினர் பதறிப்போய் அண்டை வீட்டாரின் உதவியை நாடியிருக்கிறார்கள். இதனையடுத்து அனைவரும் சென்று தேடியும் ஷேகரப்பா எங்கே சென்றார் என தெரிந்துக்கொள்ள முடியவில்லை. இப்படி இருக்கையில்தான் அவரது செல்லப்பிராணியான டாமி என்ற நாய் அவரை சென்று தேடியிருக்கிறது.
அதன்படி, ஒரு இடத்துக்கு சென்ற டாமி அங்கு குரைக்கவே அங்கு விரைந்த அனைவரும் ஷேகரப்பா சுயநினைவு இல்லாமல் காட்டுக்குள் மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியுற்றிருக்கிறார்கள். அதன் பிறகு ஷேகரப்பாவை மீட்டு ரிப்பன்பேட்டையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.
அப்போது அதிக வெப்பம் காரணமாக சோர்வாக இருந்ததால் ஷேகரப்பா மயங்கியிருக்கிறார் என மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சிகிச்சை பெற்ற பிறகு அன்றிரவே ஷேகரப்பா வீடு திரும்பியிருக்கிறார். இதனிடையே தன்னுடைய உரிமையாளரின் உயிரை காப்பாற்றிய செல்லப்பிராணியின் செயல் கிராமத்தினரிடையே கொண்டாடப்பட்டு வருகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM