தமிழகத்தில் கடந்த 10-ந் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதையடுத்து தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமாக வலுப்பெற்றதால் அதி கனமழை பெய்தது. குறிப்பாக சீர்காழியில் 122 ஆண்டுகள் இல்லாதவகையில் 44 செ.மீ. மழை பதிவாகி, அந்த ஊரில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாயின. சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் போன்ற மாவட்டங்களிலும் விடாது மழை கொட்டியது.
இந்நிலையில் தமிழ்நாடு வானிலை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கியமான தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வறண்ட வானிலையே இருக்கும். பள்ளி செல்லும் மாணவர்கள் விடுமுறை கிடைக்கும் என்று நினைக்க வேண்டாம். அதற்கு வாய்ப்பு குறைவுதான்.குன்றத்தூர் தவிர மற்ற பகுதியில் கொஞ்சம் கஷ்டம்தான்.
அடுத்த மழை 20ம் தேதி வாக்கில் தொடங்கும். ஒன்று இரண்டு நாட்கள் முன் பின் இருக்கலாம். காற்றழுத்த தாழ்வு பகுதி அங்கே உருவாகலாம். அது வலிமை குறைந்த சூறாவளியாகவோ அல்லது தாழ்வு பகுதியாகவோ மாறலாம். இந்த சீசனில் நம்மை தாக்க போகும் முதல் சக்கரம் இது என்றும் கூறலாம். ஆனால் அதை பற்றி முழுமையான அப்டேட்களை தெரிந்து கொள்ள இன்னும் நாட்கள் இருக்கின்றன, என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது போஸ்டில் குறிப்பிட்டு உள்ளார்.