அகமதாபாத்: குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் 1, 5-ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. இங்கு தொடர்ந்து 7-ஆவது முறையாக வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைக்கும் முனைப்புடன் பாஜக களமிறங்கியுள்ளது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபாவை ஜாம் நகர் வடக்கு தொகுதியில் பாஜக களமிறக்கியுள்ளது. இது குறித்து ரவீந்திர ஜடேஜா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
குஜராத்தில் பேரவைத் தேர்தல் வந்துவிட்டது, இது டி20கிரிக்கெட் போட்டி போல் உள்ளது. என் மனைவி பாஜக வேட்பாளராக அரசியலில் அறிமுகமாகிறார். ஜாம்நகர் மக்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்கள் அனைவரும் அவருக்கு ஆதரவு அளிக்க திரளாக வருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அவர் பிரதமர் மோடியின் வழியைப் பின்பற்றி அரசியலுக்கு வந்துள்ளார். அவரது கொள்கைகளைப் பின்பற்றி மக்களுக்கு நல்லவற்றை செய்ய விரும்புகிறார்.
முதல்முறையாக அவர் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறார். இதன்மூலம் அவர் அதிகம் கற்றுக் கொள்வார். அவருக்கு எப்போதுமே பிறருக்கு உதவும் குணம் அதிகம். எனவே பொதுமக்களுக்கு உதவும் எண்ணத்திலேயே அரசியலுக்கு வந்துள்ளார். பிரதமரைப் பின்பற்றி அவர் மக்களுக்கு உதவுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.