பனாஜி: கோவா மாநிலத்தைச் சேர்ந்த நிதின் வால்சன். எஸ்.பி.யாக (கிரைம் பிரிவு) பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு நிணநீர்க்குழிய புற்றுநோயால் (லிம்போமா) பாதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்ற இவர் கடந்த பிப்ரவரியில் நோயிலிருந்து மீண்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பனாஜியில் நடைபெற்ற அயன் மேன் டிரையத்லான் 70.3 ரக பந்தயத்தில் பங்கேற்று குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்தய தூரத்தைக் கடந்தார். அயன்மேன் டிரையத்லான் என்பது 1.9 கி.மீ. நீச்சல், 90 கி.மீ. சைக்கிளில் செல்லுதல், 21.1 கி.மீ. ஓட்டப்பந்தயம் என மொத்தம் 113 கி.மீ. தூரத்தைக் கொண்ட கடினமான போட்டியாகும்.
இந்த தூரத்தை 8 மணி நேரம், 3 நிமிடம், 53 விநாடிகளில் கடந்து மக்கள் மனதை வென்றுள்ளார் வால்சன். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘புற்றுநோய் எதிர்த்துப் போராட முடியாத நோய் அல்ல என்பதை உணர்ந்தேன். அதற்காகவே இந்த பந்தயத்தில் கலந்துகொண்டேன்’’ என்றார்
இந்த டிரையத்லானில் 1,450 பேர் கலந்துகொண்டனர். இதில் 1.9 கிலோமீட்டர் தூரத்துக்கு கடலில் நீந்தவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. கடினமான பந்தயத்தில் கலந்துகொண்டு சாதித்த போலீஸ் எஸ்.பி.க்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.