நாட்டில் இளம் சமுகத்தினர் எதிர்பார்க்கும் மாற்றத்துடன் கூடிய சிறந்த எதிர்காலத்திற்கான புதிய பொருளாதாரம் உருவாக்கப்படும் என நிதி அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
சுதந்திர இலங்கையின் 77ஆவது வரவு செலவுத் திட்டமாக, 2023ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் அல்லது வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் நேற்று (14) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்து,இதனைக் குறிப்பிட்டார்.
போட்டிமிக்க நவீன பொருளாதாரத்திற்கான பயணம் இந்த வரவு செலவுத்திட்டத்துடன் ஆரம்பிக்கப்படும். சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் பூர்ததியாகும் 2048ஆம் ஆண்டில் இலங்கை அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றியமைக்கப்படும். அதற்கான பின்னணி இம்முறை வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக வகுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நாட்டின் நீண்டகால அபிவிருத்திக்கான அடித்தளம் சரியான தீர்மானமே ஒழிய, பிரபல்யமிக்க தீர்மானம் அல்லவென்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.
இதேவேளை ,இம்முறை வரவு செலவுத்திட்ட யோசனையை செவிமடுப்பதற்காக வரலாற்றில் முதற்தடவையாக பாடசாலை மாணவர்களும் இளைஞர்களும் நேற்று (14) பாராளுமன்றத்திற்கு வந்திருந்தமை விசேட அம்சமாகும்.
400இற்கும் அதிகமான பாடசாலை மாணவர்களும் இளையோர் பாராளுமன்றம் மற்றும் பல்வேறு இளைஞர் அமைப்புக்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களும் இவர்களில் உள்ளடங்குகின்றனர். ஜனாதிபதியின் அறிவித்தலின் பிரகாரம் இவர்கள் பாராளுமன்றத்திற்கு வந்திருந்தனர். இவர்களுக்காக தேனீர் உபசாரமும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இவர்களின் கேள்விகளுக்கும் ஜனாதிபதி பதிலளித்துள்ளார்.