இயக்குநர் மஜூ இயக்கத்தில் சன்னி வெய்ன், கிரேஸ் ஆண்டனி, பாலி வல்சன், அனன்யா, அலென்சியர் லேலோபஸ் ஆகியோர் நடிப்பில் உருவான மலையாளத் திரைப்படம் ‘அப்பன்’. சுதீஷ் பப்பு இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். இத்திரைப்படம் ‘SonyLiv’ ஓ.டி.டி தளத்தில் கடந்த அக்டோபர் 28ம் தேதி வெளியாகியிருந்தது.
ஒரு அப்பா எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்ற கருத்தை முன்வைத்து கேலி, கிண்டல், நக்கல், நையாண்டி, பிடிவாதம் என எல்லாவற்றையும் கலந்து ஒரு டார்க் காமெடி திரைப்படமாக எடுக்கப்பட்ட இத்திரைப்படம் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளரான பப்பு என்று அறியப்படும் சுதீஷ் பப்பு (44) ‘Amyloidosis’ என்ற நோயின் பாதிப்பால் நேற்று (நவம்பர் 14) உயிரிழந்தார். இவர் மது பந்தர்கர், ராஜீவ் ரவி, ஸ்ரீநாத் ராஜேந்திரன் போன்ற முன்னணி மலையாள திரை ஆளுமைகளுடன் பணியாற்றியவர். இவரின் சிறப்பான ஒளிப்பதிவில் வெளியான கடைசித் திரைப்படமான ‘அப்பன்’ திரைப்படத்தில், இவரது நேர்த்தியான ஒளிப்பதிவுக் கலையை பலரும் பாராட்டியிருந்தார். இவரது மறைவு பற்றிக் கூறியுள்ள ‘அப்பன்’ திரைப்படத்தின் இயக்குநர் மஜூ, “அவர் மிகவும் திறமையானவர். ‘அப்பன்’ படத்தின் படப்பிடிப்பின் போதே அவர் உடல்நலக்குறைவுடன்தான் இருந்தார். ஆனால், அவரின் இந்தத் துயர்மிகு இறப்பை யாரும் நினைத்துப் பார்க்கவில்லை” என்று கூறியுள்ளார்.