புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணியை மேற்கொள்ளும் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு, பராமரிப்பு உள்ளிட்டவை தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு கண்காணிப்பு குழுவை மாற்றியமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அணை தொடர்பான விவகாரங்களை இக்குழு முன்பு முறையிடவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், தமிழக அரசு தற்போது உச்ச நீதிமன்றத்தில் அணை பராமரிப்பு தொடர்பாக புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், “அணை பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் முல்லைப் பெரியாறில் பராமரிப்பு பணியை குறிப்பிட்ட காலத்துக்குள் மேற்கொள்ள, அணை பாதுகாப்பு கண்காணிப்பு குழுவுக்கு உத்தரவிட வேண்டும். அதேபோல, முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தும் வகையில் நிலுவையில் உள்ள பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்க கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும். குறிப்பாக, பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக 15 மரங்களை வெட்டவும், சாலைகள் அமைக்கவும் கேரள அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை. இது தொடர்பாக அணை பாதுகாப்பு கண்காணாப்பு குழுவிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை.
எனவே, பேபி அணையை பலப்படுத்தும் பணிக்காகவும், முல்லைப் பெரியாறு பிரதான அணையில் சிமென்ட் கலவை பூசுவதற்கும், அணையில் இடது பகுதியில் உள்ள உபரி நீர் மதகை சரி செய்வதற்கும், நிலநடுக்கங்களை கண்டறியும் “செஸ்மிக்” உபகரணத்தை அமைக்கவும் மற்றும் வழக்கமான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஒத்துழைப்பும், உரிய அனுமதியையும் தமிழகத்துக்கு அளிக்க வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீர்வரத்தை கண்டறியும் உபகரணத்தை கேரள அரசு அமைக்க வேண்டும். முல்லைப் பெரியாறில் புதிய படகுகளை விட தமிழகத்துக்கு அனுமதி வழங்க வேண்டும். தேக்கடியில் உள்ள அறைகளை (Dormitory) சீர் செய்ய தமிழக அரசுக்கு அனுமதி வழங்க வேண்டும். மேலும், பராமரிப்பு பணிக்கான உபகரணஙகள் கொண்டு செல்ல வல்லக்கடவு முதல் முல்லைப்பெரியாறு அணை சாலை அமைக்கவும், 15 மரங்களை அகற்றவும் கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.