நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்த சுபாஷ், ஸ்ரீலட்சுமி ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் ஊட்டியில் நகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரின் மூத்த மகன் மகேஷ் குமாரும் இவருடன் சேர்ந்து கடையை நிர்வகித்து வருகிறார். இளைய மகன் கோவை ஆர்.எஸ் புரத்தில் லட்சுமி டைமண்ட் என்ற பெயரில் கடையை நடத்தி வந்திருக்கிறார். இவர்கள் மூவரும் சேர்ந்து கோவையில் உள்ள தங்க நகை மொத்த வணிகர்கள் சிலரிடம் நம்பிக்கை அடிப்படையில் நகைகைளைப் பெற்று பணத்தை திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு தன்னிடம் 892 கிராம் தங்கத்தை வாங்கி ஏமாற்றியதாக கோவையைச் சேர்ந்த தங்க நகை மொத்த வணிகரான சபரி ஜுவல்லர்ஸ் உரிமையாளர் இந்த மூன்று பேர் மீதும் மோசடி புகார் அளித்திருக்கிறார். இதன் அடிப்படையில் தந்தை மற்றும் மகன்கள் இருவர் என மூன்று பேர் மீதும் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், ஊட்டியில் உள்ள இவர்களின் நகைக்கடையில் கோவை குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு நகை, பணம் மற்றும் வங்கி கணக்கு புத்தகங்களை பறிமுதல் செய்தனர்.
இந்த மோசடி பின்னணி குறித்து நம்மிடம் பேசிய நீலகிரிகியைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர், “இவர்கள் 3 பேரும் சேர்ந்து 2017-ம் ஆண்டு சபரி ஜூவல்லரி மேலாளரிடம் 892 கிராம் தங்க நகைகளை பெற்று கொண்டு அதற்கான தொகையை 2 வாரத்தில் தருவதாக உறுதி அளித்துள்ளனர். ஆனால், தொகையை சபரிநாதனுக்கு வழங்காமல் பல காரணங்களைச் சொல்லி இழுத்தடித்திருக்கிறார்கள். 2018-ம் ஆண்டு 281 கிராம் தங்கத்தை சபரிநாதனுக்கு திருப்பி கொடுத்திருக்கிறார்கள். மீதமுள்ள 611 கிராம் தங்கத்தை மீட்டுத்தர வேண்டி சபரிநாதன் அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து விசாரித்திருக்கிறார்கள்.
இதேபோல் கோவையை சேர்ந்த பத்மராஜ் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் ரவிசங்கர், பாலாஜி முரளி, தண்டபாணி மற்றும் திருச்சூரை சேர்ந்த தீபக் ஆகிய 4 நகை வியாபாரிகளிடமும் இதே பாணியில் நகைகளை வாங்கி ஏமாற்றியிருப்பதும் தெரியவந்தது. ஊட்டியில் நடத்திய சோதனையில் 80 பவுன் நகை, ரூ. 40 ஆயிரம் பணம் மற்றும் 2 வங்கி கணக்கு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்” என்றார்.