தெலுங்கு இயக்குநர் தில் ராஜூ இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் ‘வாரிசு’ படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போதைய சூழலில் அது கேள்விக்குறியாகியுள்ளது. தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம், பொங்கல், தீபாவளி போன்ற விடுமுறை நாட்களில் தெலுங்கு படங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என அதிரடியாக அறிவித்துள்ளனர். இதனால், தெலுங்கில் விஜய்யின் வாரிசு திட்டமிட்டப்படி ரிலீஸாகுமா? என்ற கேள்வி எழுந்து கொண்டிருக்கும்போதே தமிழிலும் பொங்கலன்று வெளியாகுமா? என்ற கேள்வி துரத்திக் கொண்டிருக்கிறது.
பொங்கல் விருந்தாக அஜித்தின் ‘துணிவு’ படமும் வெளியாக இருக்கிறது. ஹெச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரித்திருக்கும் இந்தப் படத்தின் தமிழக தியேட்டர் விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 3 மாதங்களுக்கு முன்பே சத்தமில்லாமல் பிஸ்னஸை முடித்திருந்தாலும், அண்மையில் ஒரு பேட்டி ஒன்றில் தான் உதயநிதி ஸ்டாலின், துணிவு படம் ரிலீஸ் அப்டேட்டை கொடுத்தார். அதேபோல், வாரிசு படத்தையும் ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனமே வெளியிடும் என பலரும் எதிர்பார்த்த நிலையில், அந்த படத்தை தயாரிக்கும் வெங்கடேஸ்வரா நிறுவனம் நேரடியாக ரிலீஸ் செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.
தமிழகத்தில் நம்பர் ஒன் தயாரிப்பு மற்றும் சினிமா விநியோக நிறுவனமாக மாறியிருக்கும் ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தைக் கடந்து மற்ற நிறுவனங்கள் படத்தை விநியோகம் செய்வது அவ்வளவு சுலபமில்லை. தியேட்டர் உரிமையாளர்கள் அனைவரும் ரெட்ஜெயண்ட் சொல்லும் படத்தை மட்டுமே அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்யவும் முன்வருவார்கள். இது இப்படி இருக்க விஜய்யின் வாரிசுக்கு துணிவு படத்திற்கு நிகரான தியேட்டர்கள் கிடைப்பது சிரமமே என்கிறது சினிமா வட்டாரம்.
பொங்கலன்று விஜய் மற்றும் அஜித்தின் படங்களான வாரிசு, துணிவு நேருக்கு நேர் என மோதும் என காத்திருந்த ரசிகர்களுக்கு இப்போதைக்கு கவலையிலேயே ஆழ்ந்திருக்கின்றனர். ஒரு சில ஏரியாக்களில் வாரிசு படத்தை விநியோகம் செய்யும் உரிமை ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்துக்கு கிடைத்தால் மட்டுமே துணிவுக்கு நிகரான தியேட்டர்கள் வாரிசு படத்துக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.