நாய் கடித்ததில் படுகாயமடைந்த பெண்ணுக்கு இழப்பீடாக ரூ.2 லட்சம் வழங்குமாறு குருகிராம் மாநகராட்சிக்கு நுகர்வோர் குறைதீர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹரியானா மாநிலம் குர்கான் நகரை சேர்ந்த முன்னி என்ற பெண் அப்பகுதியில் வீட்டு வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி தனது உறவினருடன் வேலைக்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கையில் அவரை நாய் ஒன்று ஆக்ரோஷமாக கடித்துக் குதறியது. இதில் தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் அடைந்த அந்த பெண், குருகிராமில் உள்ள சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து பின்னர் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து சிவில் லைன் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆரில், அந்த நாயின் இனம் ‘பிட்புல்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அது ‘டோகோ அர்ஜென்டினோ’ இனத்தைச் சேர்ந்த நாய் என்று அதன் உரிமையாளர் தெரிவித்தார். இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட பெண் சார்பாக வழக்கறிஞர் சந்தீப் சைனி, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019இன் கீழ் நுகர்வோர் நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்தார். அதில் படுகாயமடைந்த பெண்ணுக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் ஜிண்டால், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இடைக்கால இழப்பீடாக ரூ.2 லட்சம் வழங்குமாறு குருகிராம் மாநகராட்சிக்கு உத்தரவிட்டார். இந்த இழப்பீட்டை தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட நாயின் உரிமையாளரிடமிருந்து வசூலித்து கொள்ளவும் அவர் குருகிராம் மாநகராட்சிக்கு அனுமதி வழங்கினார். மேலும் மாவட்டத்தில் பிட்புல், டோகோ அர்ஜென்டினோ உள்ளிட்ட 11 ஆபத்தான இன நாய்களை செல்லப்பிராணியாக வளர்ப்பதை முற்றிலுமாக தடை செய்தும் நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.
இதையும் படிக்கலாமே: நாய்கள் ஜாக்கிரதை: தீராத தெருநாய்கள் தொல்லை – தீர்வு காணுமா அரசு? Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM