மயிலாடுதுறை: மயிலாடுதுறை பரிமள ரங்கநாதர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மயிலாடுதுறையில் காவிரி நதியை மையப்படுத்தி நடக்கும் முக்கிய உற்சவமான துலா உற்சவம் அனைத்து கோயில்களிலும் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், மயிலாடுதுறையில் பிரசித்திபெற்ற சுமார் 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் கடந்த 8ம் தேதி கருட கொடியேற்றத்துடன் தொடங்கி துலா உற்சாகம் நடைபெற்று வருகிறது. 9ம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். 4 மாட வீதிகளில் வளம் வந்த தேர், பிறகு நிலையை வந்தடைந்தது. காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவிரியில் புனித நீராடினர். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே திருஇந்தளூரில், 108 வைணவ திவ்ய தேசங்களில் 22வதான ஸ்ரீ பரிமள ரங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது. பெருமாள் பள்ளி கொண்ட நிலையில் அமைந்துள்ள பஞ்ச அரங்க ஆலயங்களான ஸ்ரீரங்கப்பட்டினம் ,ஸ்ரீரங்கம், சாரங்கம், அப்பாதுரங்கம் என்ற வரிசையில் ஐந்தாவது பஞ்ச ரங்க க்ஷேத்திரமாக ஸ்ரீ பரிமள ரங்கநாதர் ஆலயம் அழைக்கப்படுகிறது.