மாணவி பிரியா மரணம்.. சஸ்பெண்ட் செய்யப்பட்ட டாக்டர்கள் தலைமறைவு..!

கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மருத்துவர்கள் இருவர் தலைமறைவாகியுள்ளனர். இதையடுத்து, செல்போன் சிக்னல்களை வைத்து இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா (17). இவருக்கு மூட்டு வலி காரணமாக பெரியார் நகர் மருத்துவமனையில், கால்முட்டி சவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர், காலில் வீக்கம் ஏற்பட்டு உணர்விழப்பு ஏற்பட்டதால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு உயர்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், அவரது வலது காலில் ரத்த ஓட்டம் தடைபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, உயிருக்கு ஆபத்து ஏற்படுவதை தடுப்பதற்காக, உடனடியாக அறுவை சிகிச்சை செய்து, வலது கால் அகற்றப்பட்டது. தொடர்ந்து, அவருக்கு தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், மாணவி பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அரசு மருத்துவர்களின் அலட்சியம் மற்றும் தவறான சிகிச்சை காரணத்தால்தான் பிரியா உயிரிழந்ததாக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மாணவி பிரியா குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மேலும், கவனக் குறைவாக செயல்பட்ட மருத்துவர்கள் இரண்டு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மருத்துவர்கள் சோமசுந்தரம், பால்ராம் சங்கர் ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர்.

பணியிடை நீக்க உத்தரவு நகலை வழங்கச் சென்றபோது மருத்துவர்கள் 2 பேரும் தலைமறைவானது தெரியவந்துள்ளது. இதையடுத்து, செல்போன் சிக்னல்களை வைத்து அவர்களின் தற்போதைய இருப்பிடம் குறித்து கண்காணித்து வரும் போலீசார், மருத்துவர்கள் இருவரையும் தேடி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.