மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். இல்லையெனில் ஜிஎஸ்டி வருவாயில் பங்கு தர முடியாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் ஜார்கிராம் மாவட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய மம்தா பானர்ஜி மத்திய அரசை கடுமையாக விலாசினார்.
அவர் பேசியதாவது, “ஜிஎஸ்டி நடைமுறையை அமல்படுத்த மாநிலங்களின் ஒப்புதலை பெறுவதற்கு மத்திய அரசு பல வாக்குறுதிகளைக் கொடுத்தது. அதன்படி மாநிலங்கள் ஜிஎஸ்டியை அமல்படுத்த ஒப்புக்கொண்டன. ஆனால் மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி பங்கை திரும்ப வழங்காமலேயே நிலுவையில் வைத்திருக்கிறது.
இதனால் மாநிலங்களின் மக்கள் நலத் திட்டங்கள் பலவும் தாமதமாகின்றன. மாநிலங்களுக்குச் சரியாக ஜிஎஸ்டி வரி பங்கீட்டை வழங்க முடியவில்லை எனில் ஜிஎஸ்டி நடைமுறையையே நிறுத்திவிடலாம். ஒவ்வொருமுறையும் மாநிலங்களுக்குச் சேர வேண்டிய தொகையைப் பெறுவதற்கு பிரதமரின் காலைத் தொட்டு கெஞ்ச வேண்டுமா?
மாநிலங்களுக்குச் சேர வேண்டிய தொகையை வழங்குங்கள், முடியாவிட்டால் பதவி விலகுங்கள். இது தொடர்ந்தால் மாநிலங்கள் மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி வருவாய் செலுத்துவதை நிறுத்த வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எப்போதுமே மத்திய அரசை கடுமையாக விமர்சித்துவரும் மம்தா பானர்ஜி ஜிஎஸ்டி விவகாரத்திலும் மாநிலங்களின் உரிமையைப் பெறுவதில் தீர்க்கமாகப் பேசியிருக்கிறார். இதற்கு மத்திய அரசும், பாஜகவும் என்ன பதில் வைத்திருக்கிறது?