மிசோரம் மாநிலம் அய்சாவல் மாவட்டம் துய்ரியால் பகுதியில் பெட்ரோல் ஏற்றி சென்ற லாரி ஒன்று விபத்தில் சிக்கியது. இதனை தொடர்ந்து லாரியில் இருந்த பெட்ரோல் கீழே கொட்டியது.
இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் வாளி உள்ளிட்டவற்றை தூக்கி கொண்டு பெட்ரோலை சேகரிக்க ஓடினர். இந்நிலையில், லாரி திடீரென வெடித்து சிதறி, தீப்பிடித்து எரிந்தது.
இதில் நிகழ்விடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தவிர, வாடகை கார் ஒன்றும், 2 மோட்டார் சைக்கிளும் சேதமடைந்தன.
லாரியின் அருகே சாலையில் நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் சிகரெட் பற்ற வைக்க லைட்டரை எரிய விட்டுள்ளார். அந்த நெருப்பு பரவி, லாரி வெடித்து, பெரும் சேதம் ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில், அந்த நபர் தனது தவறை ஒப்பு கொண்டுள்ளார். கவனம் இல்லாமல் நடந்து விட்டது என அவர் கூறியுள்ளார். அவரை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 7 பேர் பலியானதை அடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in