வரவு செலவுத்திட்டத்தில் ,சமூக நலன்புரி நடவடிக்கைக்கு 85 கோடி ரூபா நிதி

சமூக நலன்புரி நடவடிக்கையின் கீழ் ஐந்து லட்சத்து 78 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு சமகால அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியாம்பலாபிற்றிய தெரிவித்துள்ளார்.

2023 ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் மொத்த அரச செலவீனத்தில் சுமார் 85 கோடி ரூபா சமூக நலன்புரித்திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும்  நிதி இராஜாங்க அமைச்சர் கூறினார்.

வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் பாராளுமன்றத்தில் நேற்று (15) இடம்பெற்றது.விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய  நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

“குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மே;றகொண்டுள்ளது. அதன்படி, தற்சமயம் ஐந்து லட்சத்து 78 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகின்றது. பொருத்தமானவர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கை அடுத்த ஜனவரி மாதம் ஆரம்பமாகும். ஏப்பிரல் மாதத்தில் இருந்து கொடுப்பனவு வழங்கப்படும்”. 

“சமுர்த்திக் கொடுப்பனவு, முதியோர் கொடுப்பனவு, நீரிழிவு நோயாளர்களுக்கான நிதியுதவி போன்ற வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். சமுர்த்தி, முதியோர், நீரிழிவு நோயாளர்கள் மற்றும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள 7 லட்சத்து 26 ஆயிரம் பேருக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இம்முறை வரவுசெலவுத் திட்டத்தில் அந்த நிவாரணம் மேலும் நான்கு மாதங்களுக்கு நீடிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டிருப்பதாக” இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

“அதற்காக தற்சமயம் ஒதுக்கப்பட்டுள்ள நிதிக்கு மேலதிகமாக நான்காயிரத்து 300கோடி ரூபா 2023  வரவுசெலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்சமயம் சமுர்த்திக்கொடுப்பனவாக 420 ரூபாவில் இருந்து நான்காயிரத்து 500 ரூபா வரையில் கொடுப்பனவைப் பெறுபவர்களுக்கு ,எதிர்வரும் 4 மாதங்களுக்கு குறைந்த பட்சம் 3 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. அதற்காக 2 ஆயிரத்து 70 கோடி ரூபா ஒதுக்கீடு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது” என்றும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியாம்பலாபிற்றிய மேலும் தெரிவித்தார்.

விவாத்தில் பங்கேற்ற இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, “முதலீடுகளை மேம்படுத்துவதற்காக கவர்ச்சிகரமான நிவாரணப் பொதி எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படும்” எனக் குறிப்பிட்டார்.

“கிராமிய இளம் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்கான வேலைத்திட்டங்களும் பல வகுக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு அரச கட்டடங்கள் தேவைப்படுமாயின் அதனை வழங்குவதற்கு அரசாங்கம் தயார். இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு முதலீட்டுச் சபை வசதிகளை வழங்கும் ” என்றும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.  

பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ்:

“நாட்டில் இடம் பெற்ற 30 வருட ககால யுத்தம், கொரோனா வைரஸ் தொற்று உள்ளிட்ட நெருக்கடியான காலகட்டங்களிலும் மலையக மக்கள் அர்ப்பணிப்புடன் தமது கடமைகளை முன்னெடுத்தனர்.தற்போதும் அவ்வாறே செயல் படுகின்றனர் ஆனால் அந்த மக்கள் தொடர்பில் வரவு செலவுத திட்டத்தில் எதுவம் இடம்பெறவில்லை.நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மலையக மக்கள் காரணமல்ல.

இந்த மக்கள் நலன் குறித்து வரவு செலவுத்திட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
வரவு செலவுத் திட்டத்தில், விவசாயத்துறை மேம்பாடுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பதுளை மடுல்சீமை பெருந்தோட்ட நிறுவனத்துக்கு சொந்தமான தோட்டமொன்றில் வாழைக் கன்றுகளை நட்டபோது, அவற்றை தோட்ட நிர்வாகம் பிடுங்கி எறிந்துள்ளது. பெருந்தோட்டங்களில் வேறொரு அரச நிர்வாகமே காணப்படுகிறது .மலையகத்தில் காணிகள் காடு மண்டிக் கிடக்கின்றன. அந்த காணிகளை விவசாயம் நடவடிக்கைகளுக்காக பெருந்தோட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.