பொள்ளாச்சி: பொள்ளாச்சி சந்தையில் நேற்று கேரள வியாபாரிகள் வருகை குறைவால் மாடு விற்பனை மந்தமாக நடைபெற்றது என வியாபாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி மாட்டு சந்தைக்கு வெளி மாவட்டம், வெளி மாநிலங்களிலிருந்தும் விற்பனைக்காக அதிகளவு மாடுகள் கொண்டு வரப்பட்ன. அப்போது கேரள வியாபாரிகள் வருகையும் அதிகரிப்பால் மாடு விற்பனை விறு விறுப்பாகி கூடுதல் விலைக்கு போகும்.
கடந்த சில நாட்களாக டெல்டா மாவட்டங்களில் தொடர் மழையால் நேற்று நடந்த சந்தை நாளின்போது, ஒரு சில மாவட்டங்களிலிருந்து மட்டுமே மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ஆந்திர மாநில பகுதியிலிருந்து மாடுகள் வரத்து ஓரளவுக்குதான் இருந்தது. இதற்கிடையே நாளை (17ம் தேதி) சபரிமலை சீசன் துவக்கத்தால், மேலும் மாடுவிற்பனை குறையும் என்பதால் நடந்த சந்தைநாளின்போது கேரள வியாபாரிகள் வருகை மிகவும் குறைவாக இருந்தது. இதனால், சந்தையில் மாடுவிற்பனை மந்தமானதுடன் குறைவான விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதில், பசுமாடு ரூ.32 ஆயிரத்துக்கும், காளை மாடு ரூ.34 ஆயிரத்துக்கும், எருமை மாடு ரூ.35 ஆயிரத்துக்கும், கன்றுக்குட்டி ரூ.13 ஆயிரத்துக்கும் என கடந்த வாரத்தைவிட குறைவான விலைக்கு விற்பனையாகியுள்ளது. கடந்த வாரத்தில் ரூ.1.80 கோடி வர்த்தகம் இருந்துள்ளது. நேற்று ரூ.1.20 கோடிக்கே வர்த்தகம் இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.