ஆண்மை, உடல் வலிமை பெருகும் என வதந்தி; விழுப்புரம் மாவட்ட காடுகளில் வேட்டையாடப்படும் கவுதாரிகள்: வழக்கு பாயும் என வனத்துறை எச்சரிக்கை

விழுப்புரம்: காடுகளில் வாழும் கவுதாரியை பிடித்து சாப்பிட்டால் ஆண்மை, உடல் வலிமை பெருகும் என்ற வதந்தியால், விழுப்புரம் மாவட்டத்தில் கவுதாரிகள் வேட்டையாடப்பட்டு ஜரூராக விற்பனை நடந்து வருகின்றது. இதுபோன்ற வேட்டை சம்பவத்திலோ, வாங்கிசாப்பிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை எச்சரித்துள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வனத்துறைக்குச் சொந்தமான காடுகளும், சமூகக்காடுகளும் உள்ளன. இதில், குறிப்பாக மான், காட்டுப்பன்றிகள், முயல் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடி, இறைச்சிகளை விற்பனை செய்வதும், மான் தோல், கொம்புகளை விற்பனை செய்வது சம்பந்தமாக கடந்த காலங்களில் தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன.

குறிப்பாக, உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், ரிஷிவந்தியம் உள்ளிட்ட சுற்றியுள்ள வனப்பகுதியையொட்டிய கிராமங்களில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் அதிகளவில் எழுந்தன. இதையடுத்து இதனை தடுக்க வனத்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டதால் தற்போது வனவிலங்குகள் வேட்டையாடுவது ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் காடுகளில் வசிக்கும் கவுதாரியை வேட்டையாடும் சம்பவங்கள் தற்போது தொடர்ந்து அதிகரித்துள்ளாக வனத்துறையினருக்கு தொடர் புகார்கள் வந்துள்ளதாம். காடுகளிலும், புதர் மண்டிய இடங்களிலும் காணப்படும் பறவையினம் கவுதாரி. தவிட்டு நிற உடலில் கரு நிறக் கோடுகளை உடைய கோழியைப் போன்ற ஒரு வகைப் பறவை இது.

இத்தகைய இடங்களில் இப்பறவைகள் காலையிலும், மாலையிலும் உரக்கக் கூவுவதைக் கேட்க முடியும். இனப்பெருக்க காலத்தில் ஆண் கவுதாரியின் இக்கூவல் பிற கவுதாரிகளை அழைக்கக்கூடியதாக இருப்பதால், அவற்றைப் பிடிக்க உதவும் கவர்பொருளாகவும் இது பயன்படுத்தப்படுகிறது. கவுதாரி கூவியவுடன் எங்கோ இருக்கும் மற்ற கவுதாரிகள் சத்தம் வரும் திசை நோக்கி பறந்து தரையை நோக்கி தவழ்ந்து வரும்போது வேட்டையாடுபவர்கள் வலையை விரித்து வைத்து அவற்றைப் பெருமளவில் பிடித்து விற்கின்றனர். கவுதாரி இறைச்சியை சாப்பிட்டால் ஆண்மை அதிகரிப்பதாகவும், உடல் வலிமையும், ஆண்மையும் அதிகரிப்பதாகவும், நெஞ்சு சளி குறையும் என கூறி வேட்டை கும்பல், அவற்றை வனப்பகுதியில் இருந்து பிடித்து வந்து மக்கள் கூடும் இடங்களில் ஜரூராக விற்பனை செய்கின்றனர்.

சமீப காலமாக வனப்பகுதியில் நடமாடும் அரிய வகை பறவைகளை, வேட்டை கும்பல் பிடித்து வந்து அவற்றை சாப்பிட்டால் உடல் நலத்திற்கு நல்லது என கூறி பொதுமக்களுக்கு விற்பனை செய்வதை முழு நேர தொழிலாக இக்கும்பல் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு ஜோடி கவுதாரி ரூ.500 முதல் ரூ.850 வரையிலும் மேலும் வாங்கும் நபரின் தோற்றத்தை வைத்து விலை சொல்லி விற்பனை செய்கின்றனர். வனவிலங்கு பட்டியலில் உள்ள இந்த கவுதாரி வேட்ைடத்தொழில் மாவட்டத்தில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளதாம். இதனை, தடுக்க மாவட்ட வனத்துறை உரிய நடவடிக்கை எடுத்து கவுதாரி இனங்களை காக்கவேண்டுமென சமூகஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவை: இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், பணம் சம்பாதிக்கும் ஆசையில் ஏதாவது வதந்திகளை கிளப்பி பறவைகளை பிடித்து வந்து சிலர் விற்பனை செய்கின்றனர். கவுதாரி பறவைகளை பிடித்து சாப்பிட்டால் அதை விற்பனை செய்தவர்கள், வாங்கி சாப்பிட்டவர்கள் மீதும் வனத்துறையினரால் நடவடிக்கை எடுக்கப்படும். வளர்ப்பு பறவைகளை மட்டும் அடித்து சாப்பிட மனிதர்களுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. காடுகளில் வாழும் பறவை, மிருகங்களை பாதுகாப்பதில் ஒவ்வொரு குடிமகனுக்கும் பொறுப்பு உண்டு.

மேலும் கவுதாரி உள்ளிட்ட வனவாழ் உயிரினங்களை பொதுமக்கள் அடையாளம் காட்டினால் மட்டுமே இந்த வேட்டையை முழுமையாக ஒழிக்க முடியும் என்றனர். கவுதாரி இறைச்சியை சாப்பிட்டால் ஆண்மை அதிகரிப்பதாகவும், உடல் வலிமையும்,  ஆண்மையும் அதிகரிப்பதாகவும், நெஞ்சு சளி குறையும் என கூறி வேட்டை கும்பல்,  அவற்றை வனப்பகுதியில் இருந்து பிடித்து வந்து மக்கள் கூடும் இடங்களில்  ஜரூராக விற்பனை செய்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.