ஆஸ்திரேலியா-இங்கிலாந்து மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இன்று நடக்கிறது

அடிலெய்டு,

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மெல்போர்னில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய இங்கிலாந்து அணி அந்த சூட்டோடு சூடாக இந்த தொடரில் விளையாடுகிறது.

20 ஓவர் உலக கோப்பை போட்டியில் அரைஇறுதிக்கு முன்னேற முடியாமல் ஏமாற்றத்துடன் வெளியேறிய ஆஸ்திரேலிய அணி கிடைத்த ஓய்வை பயன்படுத்தி புத்துணர்ச்சியுடன் களம் திரும்பும்.

ஒருநாள் போட்டியில் இருந்து கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஓய்வு பெற்றதால் கம்மின்ஸ் ஒருநாள் போட்டி அணியை முதல்முறையாக வழிநடத்துகிறார். சமீபத்தில் காயம் அடைந்த மேக்ஸ்வெல் தவிர முன்னணி வீரர்கள் அனைவரும் ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ளனர்.

ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி 20 ஓவர் உலக கோப்பையில் ஆடாத ஜாசன் ராய், ஜேம்ஸ் வின்சி, சாம் பில்லிங்ஸ், ஆலி ஸ்டோன்ஸ் போன்றோரை அதிகம் நம்பி இருக்கிறது. ஒருநாள் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 152 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 84-ல் ஆஸ்திரேலியாவும், 63-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்று இருக்கின்றன. 2 ஆட்டம் டையில் முடிந்தது. 3 ஆட்டங்கள் முடிவு இல்லாமல் போனது. தொடரை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இந்திய நேரப்படி காலை 8.50 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.