ஐரோப்பிய யூனியனைத் தொடர்ந்து, இந்தியாவில் விற்கப்படும் அனைத்து ஸ்மார்ட் சாதனங்களுக்கும் பொதுவான சார்ஜிங் போர்டாக USB Type-C ஐ ஆக்குவதை இந்தியாவும் பரிசீலிக்கும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் அனைத்து ஸ்மார்ட் சாதனங்களுக்கும் ஒரே மாதிரியான சார்ஜிங் போர்ட்களை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் குறைந்த விலை ஃபீச்சர் ஃபோன்களுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து விரிவான விவாதங்களை நடத்திய நிலையில் அமைச்சரவைகளுக்கு இடையிலான பணிக்குழுவில் புதன்கிழமை இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவு செயல்படுத்தப்பட்டால், Apple நிறுவனம் பாதிக்கப்படலாம்.
“ஆலோசனை கூட்டத்தின் போது, ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் மடிக்கணினிகள் போன்ற மின்னணு சாதனங்களுக்கான சார்ஜிங் போர்டாக USB Type-C ஐ ஏற்றுக்கொள்வதில் சம்பந்தப்பட்ட துறைகளிடையே பரந்த ஒருமித்த கருத்து வெளிப்பட்டது என தொலைபேசிகள், நுகர்வோர் விவகார செயலாளர் ரோஹித் குமார் சிங் கூறினார்.
ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய தொழில் கூட்டமைப்பு, இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் மற்றும் IIT கான்பூர், IIT (BHU), வாரணாசி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நாட்டில் உருவாகும் பெரிய அளவிலான எரிசக்தி கழிவுகளை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ASSOCHAM-EY வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ‘இந்தியாவில் மின்னணு கழிவு மேலாண்மை’ என்ற தலைப்பில், இந்தியா 2021 ஆம் ஆண்டில் 5 மில்லியன் டன் மின்-கழிவுகளை உருவாக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, இது சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்ததாக உள்ளது. யுனிவர்சல் சார்ஜர்களை நோக்கிய மாற்றம், தயாரிப்பு பேக்கேஜிங்கில் சார்ஜர்களின் விலையைக் குறைக்கும் என்று அதிகாரிகள் நம்புகிறார்கள். ஏனெனில் பெரும்பாலான நுகர்வோர்களிடம் தேவையான சார்ஜர்கள் மற்றும் சார்ஜிங் பாகங்கள் இருக்கும் என்பதால், புதிதாக சாதனத்துடன் சார்ஜர்கள் வாங்குவது குறையும் எதிர்பார்க்கப்படுகிறது.
யூனிவர்சல் டைப்-சி சார்ஜ் போர்ட்டுக்கு அழுத்தம் கொடுத்த முதல் பிராந்தியம் ஐரோப்பிய ஒன்றியம் ஆகும். இந்த ஆண்டு ஜூன் மாதம், 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் ஸ்மார்ட்போன்கள் உட்பட முழு அளவிலான மின்னணு சாதனங்களுக்கும் USB-C கட்டாயமாக்கும் சட்டத்தை ஐரோப்பிய யூனியன் கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய யூனியன் பாராளுமன்றம், அக்டோபர் மாதம், ஒரு முக்கிய மைல்கல்லாக, எலக்ட்ரானிக் கேஜெட்டுகள் தொடர்பாக புதிய விதிகளை அங்கீகரித்தது. இந்த புதிய விதிகள் 2024 க்குள் மொபைல் போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் கேமராக்கள் போன்ற மின்னணு கேஜெட்டுகளுக்கு, உலகளாவிய சார்ஜிங் போர்ட் அறிமுகப்படுத்தப்படுவதை உறுதி செய்கிறது. அமெரிக்காவில் உள்ள சில ஜனநாயகக் கட்சியினர் இதே போன்ற சட்டத்திற்கு அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. பிரேசிலும் இதே போன்ற முயற்சியை நோக்கி நகர்ந்துள்ளது. ஆப்பிள் அதன் சாதனங்களை டைப்-சி போர்ட்களுடன் வெளியிட வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.