“அறுவை சிகிச்சையின் போது தவறுகள் நடைபெறுவது தடுப்பதற்காக, ஒவ்வொரு அறுவை சிகிச்சையும் பிறகும் தணிக்கை செய்யும் நடைமுறை கொண்டு வருவதற்கு ஆலோசனை மேற்கொள்ளப்படும்” என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி பட்டப்படிப்பு கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியலை சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். மேலும் பட்ட மேற்படிப்பு இட ஒதுக்கீட்டுக்கான ஆடைகளையும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், “இந்திய மருத்துவத்துக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. திண்டுக்கல் வேடசந்தார் பகுதியில் 200 ஏக்கரில் மூலிகை செடிகள் விளைவிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. அது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தனியார் நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்துகளின் தரத்தை ஆய்வு செய்து தரும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. அரும்பாக்கத்தில் உலகத்தரத்தில் அமைந்துள்ள இந்த ஆய்வு மையத்தில் மருந்தின் வீரியம் எப்படி உள்ளது என்று குறைந்த செலவில் சோதனைகள் செய்ய முடியும்.
மேலும் தமிழகத்தில் 100 இடங்களில் இந்திய மருத்துவம் கட்டமைப்பு தலா ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது. நாமக்கல், பழனியில் சித்த மருத்துவக்கல்லூரி, 50 படுக்கைகளுடன் கூடிய சித்த மருத்துவமனை அமைக்கப்படுகிறது.திருவண்ணாமலையில் ரூ.7 கோடியில் சித்த மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகிறது.
சித்த மருத்துவத்துக்கு பல்கலைக்கழகம் இந்தியாவில் முதல் முதலாக தமிழகத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அதில் சில கேள்வி கேட்டு ஆளுநர் திருப்பி அனுப்பினார். அதற்கு விளக்கும் கொடுத்து ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் ஆளுநர் அனுமதி அளிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த பல்கலைக்கழகத்துக்காக மாதவரம் பகுதியில் 25 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் அங்கு பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.
மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மருத்துவமாக சித்த மருத்துவம் அமைந்துள்ளது. கொரோனா காலத்தில் 75 இடங்களில் சித்த மருத்துவ மையம் அமைக்கப்பட்டது. இது சிறப்பாக பயனளித்தது. இதனால்தான் சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. கூடுதலாக சித்த மருத்துவமனைகள், சித்த மருத்துவ கல்லூரிகள், சித்த மருத்துவ பல்கலைக்கழகம் போன்றவை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டால், அந்த பிரிவில் புதிய படிப்புகள் தொடங்கப்பட வாய்ப்புள்ளது. மக்களை தேடி மருத்துவத்திலும் சித்தா மருந்துகள் நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது.
தகுதியற்ற நபர்கள் யோகா போன்ற துறைகளில் பணியில் இருப்பதாக தெரியவில்லை. தகுதியற்ற நபர்கள் பணி நியமனம் பெற்றதாக புகார் வந்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கொரானா கலத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட செவிலியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் இருந்தாக எந்த தகவலும் வரவில்லை. அப்படி ஊதியம் வழங்கப்படாமல் இருந்தால் உடனே வழங்கப்படும்.
மாணவி பிரியாவின் இழப்பு என்பது ஈடு செய்ய முடியாத இழப்பு. கோடிகளால் ஈடு செய்ய முடியாத இழப்புதான். நான்காவது மாடியில் இருந்த பிரியாவின் வீட்டிற்கு முதல்வர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பிரியாவின் அண்ணனுக்கு தற்காலிக வேலை, குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் உதவி, 420 சதுர அடி குடிசைமாற்று வீடு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மருத்துவர்களுக்கு எந்த வேலை நிர்பந்தமும் கிடையாது. தவறுகளை தடுக்க மகப்பேறுக்குப் பிறகு, அது குறித்து தணிக்கை நடத்தப்படுகிறது. அதேபோன்று அனைத்து அறுவை சிகிச்சைக்கும் பிறகும் தணிக்கை நடத்தும் முறை அமல்படுத்தலாம். இது குறித்து விரைவில் ஆலோசனை நடத்தப்படும் என்று பேட்டி அளித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM