தெஹ்ரான்,
ஈரானின் தென்மேற்கு மாகாணமான குசெஸ்தானில் உள்ள இசே நகரில் உள்ள சந்தையில் நேற்று மாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
ஹிஜாப் போராட்டங்களால் ஈரானில் பதற்றமான சூழல் காணப்படுகிறது. இந்த போராட்டங்களின் போது பயங்கரவாதத்தைத் தூண்டும் விதமாக ஆயுதங்களை பயன்படுத்தியதாகக் கூறி, நேற்று இரண்டாவதாக ஒருவருக்கு ஈரான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இசேவில் உள்ள சந்தை பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள் சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பல பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.இது பயங்கரவாத தாக்குதல் என்று அங்குள்ள ஊடகங்கள் கூறியுள்ளன.
குசெஸ்தான் மாகாண துணை கவர்னர் வலியொல்லா ஹயாதி கூறுகையில், “இசே நகரில் உள்ள சந்தையில் மாலை 5.30 மணியளவில் வந்த குற்றவாளிகள் தானியங்கி துப்பாக்கிகளை பயன்படுத்தி சுட்டனர். அதில் 3 ஆண்கள், 1 பெண் மற்றும் ஒரு சிறுமி உள்பட 5 பேர் உயிரிழந்தனர். அதில் போலீஸ் அதிகாரிகளும் அடங்குவர். இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. குற்றவாளிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தார்.