“என் வசீகரம் ஒரு கூட்டுக்குள் அடங்கிவிட்டது!" – `இந்தியன்' கமல் @1995

அந்த நிலாவைக் கூடக் கையில் பிடித்து விடலாம் போல…! ஆனால், பேட்டிக்காக கமல்ஹாசனைப் பிடிப்பது அவ்வளவு ஈஸியாக இல்லை. ‘இந்தியன்’ பட ஷூட்டிங் ஷெட்யூலில் பிஸியாக இருந்தார் கமல். ‘இந்தியன்’ படம் பற்றியோ, அதில் கமலின் வித்தியாச ‘கெட்டப்’ பற்றியோ செய்தி எதுவும் லீக் ஆகிவிடக் கூடாது என்று யூனிட் மொத்தமும் உஷாராக இருந்ததில் இந்தக் கெடுபிடி.

இருந்தும், சற்றும் மனம் தளராத நம் விக்கிரமாதித்த முயற்சிளுக்குப் பின், ஒரு வழியாக கமலிடம் பேட்டி வாங்கியே விட்டோம்.

கலைடாஸ்கோப் காட்டும் பலப்பல வண்ணச் சிதறல்கள் மாதிரி, இந்த மனிதருக்குள்தான் புதுப்புது கோணங்களில் எத்தனையெத்தனை எண்ணச் சிதறல்கள்.

இனி கமலும் நீங்களும்….

“உங்களுக்கு ‘மேக்னம் ஓபஸ்’ என்று நீங்கள் நினைப்பது எந்தப் படம்?”

“‘மேக்னம் ஓபஸ்’ என்று நீங்களும் நினைக்கும் படம்தான்… நான் மட்டும் நினைத்துக் கொள்வது தவறு என்பதை என் முதல் படமான ‘ராஜபார்வை’யில் உணர்ந்தேன்.”

உங்கள் கலையுலக வாழ்க்கையை ‘நாயகனுக்கு முன், நாயகனுக்குப் பின்’ என இரண்டாகப் பிரிக்கலாம் என்று தோன்றுகிறது. ‘நாயகன்’ படத்துக்கு அப்புறம்தான். ப்ளேபாய் இமேஜ் தவிர்த்த – உங்கள் நடிப்பின் பல பரிமாணங்கள் உள்ளடக்கிய சீரியஸ் படங்கள் (அபூர்வ சகோதரர்கள், குணா, தேவர்மகன்…) வர ஆரம்பித்தன. அந்த வகையில் மணிரத்னம் உங்கள் இன்ஸ்பிரேஷனா?”

“எனது கலையுலக வாழ்க்கையை ‘கமலுக்கு முன், கமலுக்குப் பின்’ என்று மட்டும் பிரிப்பதே நியாயம்.

(நடிகர் திலகத்தின் கலையுலக வாழ்க்கையை நான் ‘வியட்நாம் வீடுக்கு முன்’, ‘வியட்நாம் வீடுக்குப் பின்’ என்றோ ‘கட்டபொம்மனுக்கு முன்-பின்’ என்றோ பிரிக்க முற்பட்டதில்லை)

நல்ல சினிமாவை நோக்கிய எனது பயணம் நான் பத்தொன்பது வயதில் ஆர்.சி.சக்தியுடன் சேர்ந்து எழுதியும் ‘உணர்ச்சிகள்’ படம் முதல்தான் வெளியே பிரபலமாகியது. மற்றபடி எனது இன்ஸ்பிரேஷன் பலர். டி.கே.எஸ், ஆர்.சி. சக்தி, அனந்து, காலஞ்சென்ற எனது நண்பன் ராஜன் – முக்கியமாக எனது மனைவி சரிகா ஆகியோர். இன்னும் பலப் பல திறமைகள் எனக்கு இன்ஸ்பிரேஷன்” 

கமல்ஹாசன்

“சமீப காலமாக உங்கள் எல்லா படங்களிலும் அடியோட்டமாக ஒரு சோகம் இழையோடுகிறதே… உங்கள் வசீகரங்களையெல்லாம் ‘மென்சோகம்’ என்ற கூட்டுக்குள் சுருக்கிக் கொள்கிறீர்களே… ஏன்?” 

“சமீபம் என்பது குறுகிய காலம். பொறுத்திருங்கள்… அப்படியெல்லாம் என் வசீகரங்கள் ஒரு கூட்டினுள் அடங்கி விடாது. இது கர்வம் அல்ல… நிற்க… 

மென்சோகம் அனைவரின் தினசரி வாழ்க்கையிலும்கூட. நிகழும்… 

மதியம் ரொம்ப நேரம் உறங்கி எழுந்தால்கூட இனம் புரியாத ஒரு மென்சோகம் குழும்… 

மத்தியானமும் கொஞ்சம் தூங்கிப் பாருங்கள்.” 

“அரசியலில் உங்கள் நிலைப்பாடு குறித்து?”

“அது நிகழும் அரசியலைப் பொறுத்தது… 

1930களில் கேட்டால் வெட்கமின்றி என் அரசியலை வெளிப்படுத்தியிருப்பேன். 

பொழிப்புரை: சுதந்திரத்துக்காகத் தோன்றிய அரசியல் இயக்கங்களில் ஏதாவது ஒன்றில் இருந்திருப்பேன். அது பகத்சிங்கைச் சார்ந்த கூட்டமாகவும் இருந்திருக்கலாம். மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி கூட்டமாகவும் இருந்திருக்கலாம்.” 

“உங்களுக்கென்று ஒரு தனிப்பட்ட ரசிகர்கள் வட்டம் இருக்கிறது. இருந்தும் காதல், குடும்பம்… போன்ற சென்டிமெண்டுகளை விட்டுவிட்டு ஹாலிவுட் ரேஞ்சுக்குக் கதைக்கரு கொண்ட படங்கள் எடுக்கத் தயங்குவதேன்? ‘கிளிஃப் ஹாங்கர்’, ‘ஸ்பீட்’ மாதிரியான வித்தியாசக் கதைக்களன் கொண்ட யூனிவர்சல் படங்களை எப்போது தயாரிக்கப்போகிறீர்கள்?” 

“பதில்: 

‘குருதிப்புனல் ‘A’ என்றாலும் வயது வந்தவர்களின் யுனிவர்சல் ஃபிலிம். 

விமர்சனம்: 

“கிளிஃப் ஹாங்கர்’: நண்பனின் மனைவியை மலையுச்சியில் கைவிட்டதால், அவள் விழுந்து மடிந்த காட்சி கண்முன்னேயே நிற்பதால், வாழ முடியாமல் தவித்து, மீண்டும் அதே மலையுச்சியில் தன் காதலியைக் கைநழுவ விடாமல் காப்பாற்றியதால், மனம் தேறும் கதாநாயகனின் கதை. நடுவில் ப்ளேன் ஹைஜாக். அந்தரத்தில் கொள்ளை… ‘அரே ஹோ சாம்பா’ என்று சொல்வதைத் தவிர, ‘கப்பர்சிங்’ வேலைகள் செய்யும் வில்லன். உதடு அசையாமல் பின்னணியில் பாடல்கள். ஹெலிகாப்டர். இதுதான் அரைவேக்காட்டுத்தனமான ‘கிளிஃப் ஹாங்கர்’. 

ஹாலிவுட் ரேஞ்ச் என்பது வெறும் டெக்னிக்கல் விஷயங்கள்தான். நல்ல சினிமா ஹாலிவுட் தவிர, மற்ற இடங்களிலேயே நிறையத் தயாராகின்றன. இது உலகம் புரிந்து கொண்ட உண்மை.” 

கமல்ஹாசன், ஷங்கர்

“உங்களுக்கும் பெட்டர் ஹாஃப் சரிகாவுக்கும் செல்லச் சண்டை எப்போதாவது எது குறித்தாவது ஏற்ப்படுவது உண்டா?” 

“பல விஷயங்களில்… முக்கியமாக சினிமா விஷயங்களில்!” 

“‘மருதநாயகம்’ ப்ராஜெக்ட் பற்றி…?”

“வயிற்றுக்குள் ஒரு பட்டாம்பூச்சிகள் – மறுபக்கம் புளி”

“ரா.கி. ரங்கராஜன் + கமல், சுஜாதா + கமல்.. கிரேஸி மோகன் + கமல், பாலகுமாரன் + கமல்… உங்களுக்குப் பக்கம் பிடித்த காம்பினேஷன் எது?” 

“எல்லாருடனும் குறைந்தது மூன்று முறையாவது சேர்ந்து பணிபுரிந்து விட்டுத்தான் இப்படி ஒரு சிக்கலான சாய்ஸ் செய்யமுடியும்.” 

“இலக்கியத்துக்கு என்ன பங்களிக்கப்போகிறீர்கள்? ‘மய்யம்’ பத்திரிகையை நிறுத்திவிட்டீர்கள். வேறு பத்திரிகை தொடங்கும் எண்ணம் உண்டா?” 

“பத்திரிகை தொடங்கும் எண்ணம் இல்லை. 

சினிமாவிலும் இலக்கியம் இருக்கிறது.” 

“வாசகர்களுக்கு ‘நச்’சென்று நாலு வரியில் ஒரு புதுக்கவிதை ப்ளீஸ்…” 

“-நச்சென்று-

நாகத்தின் நச்சதனை தூற்றுவோர் தூற்றிடினும் 

நச்சதற்குக் கேடயம் போல் தற்காப்பு ஆயுதமே 

பட்சியின் அலகுபோல் பசுமாட்டின் கொம்புகள் போல் 

நமக்கெல்லாம் பொய்யைப் போல் தப்பிக்க ஓர்வழிதான் நாகத்தின் நச்சென்பேன்.”

– எஸ். கல்பனா 

படம். ஏ. ரவீந்திரன்

(26.11.1995 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து…)

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.