புதுச்சேரி அரசு துறைகளில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்து, நிர்வாக சீர்த்திருத்த துறை அடுத்தடுத்து வேலைக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதில், பல பணியிடங்களுக்கு எம்.பி.சி., இட ஒதுக்கீடு விடுபட்டுள்ளது புயலை கிளப்பியுள்ளது. குறிப்பாக ‘குரூப்-பி’ அரசிதழ் பதிவு பெறாத பணிகளுக்கு எம்.பி.சி., இட ஒதுக்கீடு விடப்பட்டுள்ளது. இதைனைக் கண்டித்து அரசியல் கட்சிகள், போராட்டத்தினை அறிவித்துள்ளன.
புதுச்சேரி இட ஒதுக்கீடு
தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு அமலில் உள்ளது. அதில், பிற்பட்டோருக்க 30 சதவீதம், மிகப் பிற்படுத்தப்பட்ட சீர்மரபினருக்கு 20 சதவீதம், ஆதி திராவிடருக்கு 18 சதவீதம் மற்றும் பழங்குடியினருக்கு 1 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
ஆனால், புதுச்சேரியில் 60 சதவீத இட ஒதுக்கீடு அமலில் உள்ளது. அதில், பிற்பட்டோருக்கு -33 சதவீதம், ஆதி திராவிடர்களுக்கு-16 சதவீதம், பிற்படுத்த பழங்குடியினர்(பி.டி.) -0.5 சதவீதம், அட்டவனை பழங்குடியினர்(எஸ்.டி.,)-0.5 சதவீதம்,இ.டபிள்யூ.எஸ்.,-10 சதவீதம் என 60 சதவீதம் இட ஒதுக்கீடு அமலில் உள்ளது.
குழப்பம்
பிற்படுத்தப்பட்டோருக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டில் குரூப்-சி., மற்றும் குரூப்-பி., பணிகளுக்கு தனித்தனி நடைமுறை கடை பிடிக்கப்படுகிறது.குரூப் சி., பணியிடங்களை நிரப்பும்போது, 33 சதவீத இட ஒதுக்கீட்டில் 18 சதவீதம் எம்.பி.சி.,க்கும், 11 சதவீதம் ஓ.பி.சி.,க்கும், முஸ்லீம் மற்றும் மீனவர்களுக்கு தாலா 2 சதவீதம் பிரித்து உள் ஒதுக்கீடாக வழங்கப்படுகிறது.
ஆனால், குரூப்-பி அரசிதழ் பதவி பெறாத பணிக்கு எம்.பி.சி.,க்கு தனியாக 18 சதவீதம் பிரித்து அறிவிப்பு வெளியிடவில்லை. பொதுவாக 33 சதவீதம் குறிப்பிட்டு அரசு பணியிட அறிவிப்பு வெளியாகிறது.
கடந்த 2005ம் ஆண்டு புதுச்சேரி அரசு பிறப்பித்த அரசாணைப்படி குரூப்-பி.,பணியிடங்களை நிரப்பும்போது,எம்.பி.சி.,பணிக்கு தனியாக இட ஒதுக்கீடு அறிவிக்கப்படுவதில்லை. கடந்த 2006 ம் ஆண்டே சப் இன்ஸ்பெக்டர் உள்பட பல்வேறு பணிகள் குரூப்-சி., பதவியில் இருந்து, குரூப்-பி பணியாக மாற்றப்பட்டது. அதனை அப்போது யாரும் கண்டுகொள்ளவில்லை.
தற்போது, அரசு பணியிடங்கள் வெளியாகியுள்ள சூழ்நிலையில் தான் குரூப்-பி பணியிடங்களில் எம்.பி.சி.,பணியிடத்திற்கு தனியாக உள் ஒதுக்கீடு இல்லை என்பதே தெரிய வந்து, பிரச்னை பூதாகரமாகியுள்ளது.
இப்பிரச்னையில், மாநில அரசு முன் இரண்டு தீர்வுகள் உள்ளன.ஒன்று குரூப்-பி., ஆக மாற்றப்பட்ட பணியிடங்களை மீண்டும் குரூப்-சி., பணியிடங்களாக மாற்ற வேண்டும். ஆனால் அது நடைமுறையில் சாத்தியமில்லை. எனவே குரூப் -பி பணியிடங்கள் குறித்து தெளிவாக மத்திய அரசினை அணுகி முடிவெடுக்க வேண்டும்.
குரூப் -பி பிரிவு அரசு பதிவு பெறாத பதவியாக உள்ளது. இது மத்திய பணி நியமன ஆணையத்தின் மூலமாக (யு.பி.எஸ்.சி.,) நிரப்புவதில்லை. புதுச்சேரி அரசு தான், மத்திய அரசு வகுத்த விதிமுறைகளை பின்பற்றி நிரப்புகிறது. எனவே இதற்கு அகில இந்திய இட ஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை.
எனவே மாநில அரசு, இதில் தயக்கம் இல்லாமல் இந்திய அரசியல் அமைப்பின் நிலைப்பாடு, மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு அளவு ஒப்புதல், புதுச்சேரிமாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரை ஆகியவற்றின் அடிப்படையில் மத்திய அரசினை அணுகி துணிவாக இட ஒதுக்கீடு விவகாரத்தில் முடிவை எடுக்க வேண்டும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்