மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் குற்றால அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. எனவே நேற்று மூன்றாவது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்து அனைத்து பகுதிகளிலும் மழை பொழிந்து வருகிறது. தென்காசி மாவட்டம் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, கடையம், ஆலங்குளம், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் என மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியிலும் மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரித்தது.
குற்றால பிரதான அருவி, ஐந்தருவி, புலி அருவி பழைய குற்றாலம் என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக கொட்டுகிறது.
தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை அளவு அதிகரித்து வருவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் மூன்றாவது நாளாக நேற்று குற்றாலம் பிரதான அருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் குளிக்க தடை விதித்தது.
புலி அருவி மற்றும் ஐந்தருவி பகுதிகளில் தண்ணீர் சீராக விடுவதால் அங்கு மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.