கோயம்புத்தூர்: கோவை அரசு மருத்துவமனை எதிரே இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் 108 ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டதாக போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவை அரசு மருத்துவமனை எதிரே பேருந்து நிறுத்தம் உள்ளது. கோவை அரசு மருத்துவமனைக்குள் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் ஆம்புலன்ஸ் நிறுத்த தற்போது போதிய இடம் இல்லை. இதனால் ஆம்புலன்ஸ்கள் பேருந்து நிறுத்தம் அருகே நிறுத்தப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று வழக்கம் போல 108 ஆம்புலன்ஸ் ஊழியர் ஆம்புலன்ஸை பேருந்து நிறுத்தம் அருகே நிறுத்தினார். அப்போது அங்கு வந்த போக்குவரத்து காவலர் 108 ஆம்புலன்ஸ் மீது 500 ரூபாய் அபராதம் விதித்தார்.
இதைத்தொடர்ந்து ஆம்புலன்ஸ் ஊழியர்கள் 108 ஆம்புலன்ஸ் எங்கு நிறுத்துவது என்று நிர்வாகத்திற்கு கேட்டனர். அதைத்தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனைக்குள் தற்காலிகமாக நிறுத்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இது 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு நோயாளிகளை கொண்டு செல்ல அசவுகரியமாக உள்ளது எனவும், ஆகவே 108 ஆம்புலன்ஸ் நிறுத்த உடனடியாக வசதி செய்து கொடுக்க வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை வைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.