கோவை: கோவையில் கார் வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, வீடுகள், வீதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த மாதம் 23-ம் தேதி நடந்த கார் வெடிப்புச் சம்பவத்தில் ஜமேஷா முபின்(25) என்பவர் உயிரிழந்தார். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் போலீஸாரின் முதல்கட்ட விசாரணைக்கு சிசிடிவி கேமராக்களின் பயன்பாடு பெரும் உதவியாக இருந்தது.
வெடித்து சிதறிய கார் எங்கிருந்து, எந்த வழித்தடத்தில் வந்தது, காரில் இருந்த நபர் யார், அவரது வீட்டிலிருந்து காரில் மூட்டையை ஏற்றியது போன்ற பல்வேறு தகவல்களை கண்டறிய சிசிடிவி கேமராக்கள் பெரும் உதவியாக இருந்தன. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சிசிடிவி கேமராக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மாநகர போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மாநகரில் பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள் சார்பில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மாநகர காவல்துறை சார்பில் மட்டும் பொது இடங்கள், சிக்னல் சந்திப்புகளில் சிசிவிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்களின் காட்சியை கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு போலீஸார் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், கார் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து மாநகரில் பொதுமக்கள் சார்பில் வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இது குறித்து மாநகர காவல்துறையினர் கூறும்போது, ‘‘ சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள வீடுகள் வாரியாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மொத்தம் எத்தனை கேமராக்கள் உள்ளன, அதில் சாலையை மையப்படுத்தி எத்தனை கேமராக்கள் உள்ளன, எத்தனை நாட்களுக்கு காட்சிகள் சேமித்து வைக்கப்படுகின்றன என்பன போன்ற விவரங்களும், அந்த வீடுகளின் உரிமையாளர் பெயர், செல்போன் எண், முகவரி உள்ளிட்டவையும் எழுத்துப்பூர்வமாக சேகரிக்கப்பட்டு வருகின்றன. சிசிடிவி கேமராக்களை முறையாக பராமரிக்கவும், அதில் பதிவாகும் காட்சிகளை குறிப்பிட்ட நாட்களுக்கு பதிவு செய்து வைத்திருக்கவும் வீட்டு உரிமையாளர்களிடம் அறிவுறுத்தப்படுகிறது’’ என்றனர்.