`தி.மு.க-வை வீழ்த்த அ.தி.மு.க-வுடன் கூட்டணிக்கு வைக்கத் தயார்’ என்று அ.ம.மு.க தலைவர் டி.டி.வி.தினகரன் முன்னதாகக் கூறியிருந்த நிலையில் தற்போது, `அ.தி.மு.க இன்று தலையில்லாத முண்டமாக, செயல்படாத நிலையில் இருக்கிறது’ என்று தெரிவித்திருக்கிறார்.
சென்னையில் அ.ம.மு.க அலுவலகத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய தினகரன், “அ.தி.மு.க இன்று செயல்படாத கட்சியாக இருக்கிறது. என்னைத் தேவையில்லாமல் இழுத்ததனால் சொல்ல வேண்டியிருக்கிறது. எனக்குத் தெரிந்தவரை பழனிசாமி விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார். அவர்கள் ஏன் மெகா கூட்டணி என்ற வார்த்தையைச் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது என்றால், கட்சி இன்றைக்கு தலையில்லாத முண்டமாக இருக்கிறது. செயல்பட முடியாத நிலையில் இருக்கிறது.
அதே நேரத்தில் நான் திரும்பத் திரும்பச் சொல்வது தி.மு.க என்கிற தீய சக்தியை வீழ்த்த வேண்டும் என்றால் அம்மாவின் உண்மையான தொண்டர்களாக தங்களை நினைப்பவர்கள் ஓர் அணியில் திரண்டால்தான் அவர்களை வீழ்த்த முடியும். ஏனென்றால் அவர்கள் கூட்டணி பலத்துடனும், ஆட்சி அதிகாரத்திலும் இருக்கின்றனர். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.ம.மு.க ஓர் அணிலைப் போல செயல்படும். எங்களுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. ஏற்கெனவே தேர்தல்களில் நாங்கள் பின்னடைவைச் சந்தித்ததனால் வருங்காலத்தில் நாங்கள் பின்னடைவையே சந்திப்போம் என்று யாராவது நினைத்தார்கள் என்றால் அது அவர்களுடைய எண்ணம். ஆனால் எங்கள் இயக்கம் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இன்றைக்கு பழனிசாமி, `என் தலைமையில் கூட்டணி அமையும்’ என்று சொல்கிறார். ஒரு சிலரின் சுயநலத்தால், பதவி வெறியால், பதவியிலிருந்ததனால் கிடைத்த அதிகாரத்தால், அந்த திமிரால் அவர்கள் பேசுவது சரி வராது. வருங்காலத்தில் அவர்கள் உண்மையை உணரக்கூடிய காலம் வரும். அதனால்தான் சொல்கிறேன் எங்களுக்கு நல்ல பிரகாசமான எதிர்காலம் இருக்கு. நிச்சயம் எங்களுடைய கூட்டணி என்பது ஒன்று பா.ஜ.க இன்னொன்று காங்கிரஸ் என்றுதான் போக முடியும். அப்படி முடியாத பட்சத்தில் தனியாக நிற்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். பழனிசாமி தலைமையில் கூட்டணி வரும் என்று நான் நம்பவும் இல்லை. ஏனென்றால் அண்ணாமலையே 25, 26 இடங்களில் பா.ஜ.க ஜெயிக்கும் என்று சொல்கிறபோது அவர் அ.தி.மு.க தலைமையில் கூட்டணி வரும் என்றுதான் சொல்கிறாரே தவிர, பழனிசாமி தலைமையில் கூட்டணி என்பதை அவர் சொல்லவும் இல்லை. பா.ஜ.க 25 எம்.பி-க்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என்றால் 40 தொகுதிகளிலும் அவர்கள் நிற்க வேண்டியிருக்கும். அப்படியென்றால் பழனிசாமி தேர்தலில் நிற்காமல் மெகா கூட்டணி தலைவராக இருந்து விட்டுக் கொடுக்கப் போகிறாரா. இவர்களெல்லாம் தனித்து நிற்கக்கூடிய தைரியம் இல்லாதவர்கள்.
அதேபோல் இன்றைக்கு தி.மு.க ஆட்சியிலிருந்தாலும், மத்தியில் ஆளுகின்ற அரசாங்கத்துக்கு அவ்வளவு பயப்படுகிறார்கள் என்று உங்களுக்குத்தெரியும். `கோ பேக் மோடி’ என்று கறுப்புக்கொடி புடிச்சவங்க இப்போது மழை காலத்தில்கூட கறுப்புக்குடை எடுத்துட்டு போகப் பயப்படுகிறார்கள். அவர்கள் பா.ஜ.க-வை திருப்திப்படுத்துவதற்காகக் காங்கிரஸைக் கழட்டிவிடுவதற்குக்கூட வாய்ப்பு இருக்கு. அதனால் எங்களுக்கு இரண்டு ஆப்ஷன் இருக்கு. அப்படி இல்லையென்றாலும் மூன்றாவது ஆப்ஷன் நாங்க தனியாககூட தேர்தலைச் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்” என்று கூறினார்.