கேரள காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை பின்பற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளதால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
கார்த்திகை மாதம் தொடங்கிவி்ட்டதையடுத்து, நிகழாண்டு மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று அதிகாலை திறக்கப்பட்டது. 41 நாட்கள் நடை திறக்கப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகாலை முதலே சபரிமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், சபரிமலையில் பணியாற்றும் போலீசார் பின்பற்ற வேண்டிய நெறிமுறை குறித்து கேரள காவல் துறை இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,, போலீசார் பக்தர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், பணியின்போது என்னென்ன நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, 2018 செப்டம்பர் 28 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி, அனைத்து பக்தர்களையும் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று காவல் துறையின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது பெண் பக்தர்களையும் சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற போலீசாருக்கு மறைமுக அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரள காவல் துறை அறிவி்ப்பால் அங்கு மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது.
கேரள அரசு இதுபோன்ற முடிவுகளை எடுத்தால், கடந்த காலங்களில் ஏற்பட்டது போல் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரன் தமது முகநூல் பக்கத்தில் எச்சரித்துள்ளார்.
அனைத்து வயது பெண்களையும் சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்க கேரள அரசும், தேவஸ்தான நிர்வாகமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ள தேவஸ்தான அமைச்சர் ராதாகிருஷ்ணன், இதுகுறித்து உச்ச நீதிமன்றமே முடிவெடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீ்ர்ப்பு அளித்தும், தேவஸ்தானமும், பல்வேறு தரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.