சென்னை: ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 20 புதிய லிப்ட்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் வரும் டிசம்பருக்குள் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையின் முக்கிய சிகிச்சை வார்டுகளை உள்ளடக்கிய டவர் 1 மற்றும் டவர் 2 கட்டிடங்களில் மொத்தம் 16 லிப்ட்கள் இயக்கப்பட்டு வந்தன. தற்போது அந்த இடங்களில் நவீன வசதிகளுடன் புதிய லிப்ட்களை அமைக்கும் பணி கடந்த 6 மாதமாக நடைபெற்று வருகிறது. தலா 8 மாடிகள் கொண்ட இந்த 2 கட்டிடங்களிலும், தற்போதைக்கு நோயாளிகள் பயன்படுத்துவதற்கு என 3 முதல் 4 லிப்ட்கள் பயன்பாட்டில் உள்ளன. மீதமுள்ள லிப்ட்களில் புதுப்பிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனால், பயன்பாட்டில் உள்ள ஒரு சில லிப்ட்களில் பெரும்பாலான நேரங்களில் நோயாளிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது. எனவே, லிப்ட்களை புதுப்பிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில் வருகிற டிசம்பர் மாதத்துக்குள் பணிகள் நிறைவடைந்து புதிய லிப்ட்கள் பொது மக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட உள்ளன. இதுகுறித்து மருத்துவமனையின் லிப்ட் பொறுப்பாளர் மாறன் கூறும்போது, “ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தற்போது 20 லிப்ட்களை புதிதாக அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. டவர் 1, டவர் 2 கட்டிடங்களில் 16 லிப்ட்கள், இதயவியல் துறையில் 2, நரம்பியல் மற்றும் ’பர்சனாலிட்டி’ சிகிச்சைப் பிரிவுகளில் தலா 1 என மொத்தம் 20 லிப்ட்களை புதிதாக அமைக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. முதல்கட்டமாக டவர் 1, டவர் 2 கட்டிடங்களில் உள்ள 16 லிப்ட்களுக்கான பணிகள் வரும் டிசம்பர் மாதம் முடிவடையும். பின்னர் மற்ற துறைகளிலும் புதிய லிப்ட்க்கான பணிகள் விரைவில் தொடங்கி முடிக்கப்படும்” என்றார்.
மேலும் மருத்துவமனையின் டீன் டாக்டர் தேரணிராஜன் அறிவுறுத்தலின்படி, கடந்த ஒருமாதமாக, டவர் 1 கட்டிடத்தில் உள்ள ஒவ்வொரு வார்டுகளுக்கும் காலை 10 மணி முதல் 11 மணி வரை அங்குள்ள உள்நோயாளிகளுக்கு பால், ரொட்டி, முட்டை போன்றவற்றை விநியோகம் செய்வதற்காக பால் வண்டியை எடுத்துச் செல்ல ஒரு லிப்ட் தனியாக ஒதுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.