ஜி-20 நாடுகளின் தலைமையை ஏற்றார் பிரதமர் மோடி: இந்தோனேசிய உச்சி மாநாட்டில் அடுத்த ஓராண்டுக்கான பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைப்பு

பாலி: பாலி தீவில் நடந்த ஜி-20 உச்சிமாநாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சியில், ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக்கொண்டார். இந்தியாவின் தலைமையில் ஜி-20 அமைப்பு லட்சியமிக்கதாக, தீர்க்கமானதாக, சிறப்பாக செயல்படும் என்று அவர் உறுதி அளித்தார்.

ஜி-20 அமைப்பின் 17-வது உச்சிமாநாடு இந்தோனேசியாவின் பாலிதீவில் கடந்த 2 நாட்களாக நடந்தது. ஜி-20 அமைப்புக்கான தலைமையை அதன் உறுப்பு நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் ஏற்கும். கடந்த ஓராண்டாக இந்த பொறுப்பு இந்தோனேசியாவிடம் இருந்தது. அதன் தலைமையின் கீழ் ஜி-20 அமைப்பின் 17-வது உச்சி மாநாடு நேற்றுடன் நிறைவு பெற்றது.

இந்நிலையில், அடுத்த ஓராண்டுக்கான ஜி-20 அமைப்பின் தலைமையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், இந்தோனேசிய அதிபர்ஜோகோ விடோடோ நேற்று ஒப்படைத்தார். வரும் டிசம்பர் 1-ம் தேதிமுதல் ஜி-20 அமைப்பின் செயல்பாடுகளை இந்தியா முறைப்படி தொடங்குகிறது. ஜி-20 அமைப்பின் அடுத்த உச்சி மாநாட்டை தலைநகர் டெல்லியில் 2023 செப்டம்பரில் இந்தியா நடத்த உள்ளது.

ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்ற பிறகு, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

புவிசார் அரசியல் பதற்றம், பொருளாதார மந்தநிலை, உணவுமற்றும் எரிபொருட்கள் விலைஉயர்வு, கரோனா பெருந்தொற்றின் நீண்டகால பாதிப்புகள் ஆகியவற்றை உலகம் ஒரே நேரத்தில் சந்தித்துள்ள வேளையில், ஜி-20அமைப்புக்கான தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கிறது.

இந்த நேரத்தில் உலக நாடுகள் ஜி-20 அமைப்பை நம்பிக்கையுடன் பார்க்கின்றன. அதற்கேற்ப,இந்தியாவின் தலைமையில் ஜி-20அமைப்பு அனைத்தும் உள்ளடங்கியதாக, லட்சியமிக்கதாக, தீர்க்கமானதாக, சிறப்பாக செயல்படும் என உறுதியளிக்கிறேன்.

பெண்களின் பங்களிப்பு: நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, உலகளாவிய மாற்றத்துக்கு ஜி-20 அமைப்பை ஒரு வினையூக்கியாக மாற்றுவோம். புதியகருத்துகள், விரைவான கூட்டு நடவடிக்கையுடன் கூடிய உலகளாவிய அமைப்பாக ஜி-20 செயல்படும். வளர்ச்சியின் பயன்கள் அனைவருக்கும் பொதுவானதாக இருக்கவேண்டும். அது ஒவ்வொருவருக்கும் கருணையுடனும், ஒற்றுமையுடனும் வழங்கப்பட வேண்டும். பெண்களின் பங்களிப்பு இல்லாமல் உலகளாவிய வளர்ச்சி சாத்தியம் அல்ல. நமது ஜி-20அமைப்பின் கொள்கையில், பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும். அமைதி, பாதுகாப்பான சூழல்இல்லாமல், பொருளாதார வளர்ச்சிமற்றும் புதுமையான தொழில்நுட்பத்தின் பயன்களை நமது எதிர்கால தலைமுறையால் அனுபவிக்க முடியாது. எனவே, அமைதி, நல்லிணக்கம் என்ற வலிமையான தகவலை ஜி-20 அமைப்பு தெரிவிக்க வேண்டும். இந்த அனைத்து முன்னுரிமைகளும், இந்தியாவின் தலைமையிலான ஜி-20 அமைப்பின் கருப்பொருளான ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்பதில் அடங்கியுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: இயற்கை வளங்களுக்கு உரிமைகொண்டாடும் உணர்வால் பிரச்சினைகள் அதிகரிக்கும். சுற்றுச்சூழல் பாதிப்புக்கு இதுதான் முக்கியகாரணம். இயற்கை வளங்களைநாம் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துவதுதான் பூமியின் பாதுகாப்பான எதிர்காலத்துக்கு தீர்வாக இருக்கும். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான வாழ்க்கை முறை என்ற இந்தியாவின் கொள்கை இதற்கு பயன் தரும்.

பாலி தீவுக்கும், இந்தியாவுக்கும் நீண்டகால உறவு உள்ளது. ஜி-20 அமைப்பின் தலைமையை இந்த பாலி புனிதத் தீவில் இந்தியா ஏற்றுள்ளது. இது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையான தருணம். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள வெவ்வேறு நகரங்களில் ஜி-20 கூட்டங்கள் நடத்தப்படும். இதன்மூலம் இதில் கலந்துகொள்ளும் பன்னாட்டு விருந்தினர்களுக்கு இந்தியாவின் அற்புதமான பன்முகத்தன்மை, பாரம்பரியம், வளமான கலாச்சாரத்தின் முழு அனுபவம் கிடைக்கும். ஜனநாயகத்தின் தாயான இந்தியாவில் நடைபெறும் தனிச்சிறப்புமிக்க கூட்டத்தில் நீங்கள் பங்கேற்க வாழ்த்துகள்.

ஓராண்டாக ஜி-20 அமைப்புக்கு தலைமையேற்று திறம்பட செயலாற்றியதற்காகவும், பாலி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கும் இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவுக்கு வாழ்த்துகள். இந்தோனேசியா மேற்கொண்ட பாராட்டத்தக்க முன்முயற்சிகளை, இந்தியா தனது தலைமையின் கீழ் முன்னெடுத்துச் செல்ல பாடுபடும். இவ்வாறு மோடி கூறினார்.

3,000 இந்தியருக்கு விசா வழங்க இங்கிலாந்து ஒப்புதல்: ஜி-20 உச்சி மாநாட்டுக்கு இடையே இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.அப்போது, இங்கிலாந்தில் இந்தியர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் கூடுதல் விசா வழங்க இங்கிலாந்து பிரதமர் ரிஷி சம்மதம் தெரிவித்தார்.

இந்த சந்திப்பு நடந்த சில மணி நேரங்களில், இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘படித்த இந்திய இளைஞர்களுக்கு இங்கிலாந்தில் வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஆண்டுக்கு 3,000 இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு விசா வழங்கப்படும். பட்டப்படிப்பை முடித்த 18-30 வயது இந்திய இளைஞர்கள் இங்கிலாந்தில் தங்குவதுடன், 2 ஆண்டுகள் வரையிலான வேலைவாய்ப்பையும் அவர்கள் பெறலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.