டிரோலால் பேஸ்புக்கை விட்டு விலகிய பிரதீப் ரங்கநாதன் : சிறந்த மனிதனாக முயற்சி செய்வதாக பதிவு
'கோமாளி' படத்தின் மூலம் இளம் வயதிலேயே இயக்குனராக அறிமுகமாகி, முதல் படத்தை வெற்றிப் படமாகக் கொடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். 'லவ் டுடே' படத்தின் மூலம் அவரே கதாநாயகனாக அறிமுகமாகி, இயக்கிய இரண்டாவது படத்தையும் வெற்றிப் படமாக்கிவிட்டார்.
நாயகனாக அறிமுகமானவரை ரசிகர்களும் ஏற்றுக் கொண்டு அவருக்கு வரவேற்பைக் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். சமீபத்தில் 'கலகத் தலைவன்' பட டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதீப்பிற்கு ரசிகர்களிடம் ஆரவாரம் கிடைத்தது. இது யாரோ சிலரை வெறுப்படைய வைத்திருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்பாக பிரதீப் அவருடைய பேஸ்புக்கில் போட்ட பதிவுகளை எல்லாம் தேடிப் பிடித்துப் போட்டு அதை கடந்த சில நாட்களாக வைரலாக்கினார்கள்.
சினிமா, கிரிக்கெட் பிரபலங்கள் என பலரைப் பற்றிய அவரது பேஸ்புக் பதிவுகள் கன்னாபின்னாவென இருந்தன. அதை வைத்து அவரை சமூக வலைத்தளங்களில் சிலர் 'டிரோல்' செய்து வந்தனர். இதனால், தன்னுடைய பேஸ்புக் பக்கத்தையே நீக்கிவிட்டார் பிரதீப்.
இது குறித்து தன்னுடைய டுவிட்டரில், “சுற்றி வரும் பல பதிவுகள் போட்டோஷாப் செய்யப்பட்டவை. ஒரு வார்த்தையை மாற்றினால் கூட பல விஷயங்கள் மாறும் என்பதால் என்னுடைய பேஸ்புக் பக்கத்தை டிஆக்டிவேட் செய்துவிட்டேன். விஷங்களை மாற்ற முயற்சிப்பவர்கள் மீது எனக்குக் கோபமில்லை. மாறாக மக்கள் என்னை எவ்வளவு ஆதரிக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும் சில பதிவுகள் உண்மையானவைதான். ஆனால், கசப்பான வார்த்தைகள் கொண்ட பதிவுகள் போலியானவை. நானும் தவறு செய்துள்ளேன். வயதுக்கு ஏற்ப நாமும் மாறுவோம், கற்றுக் கொள்வோம், அதை சரி செய்ய முயற்சித்து வருகிறேன். ஒவ்வொரு நாளும் சிறந்த மனிதனாக முயற்சி செய்கிறேன்,” என தன்னைப் பற்றிய டிரோலுக்கு விளக்கம் கொடுத்துள்ளார்.