டெல்லியில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட தினத்தன்று நடந்தது என்ன?! – விசாரணையில் வெளியான தகவல்கள்

மும்பையை சேர்ந்த ஸ்ரத்தா என்ற பெண் டெல்லியில் கடந்த மே மாதம் அவரின் காதலனால் கொடூரமாக கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இக்கொலையை செய்த ஸ்ரத்தாவின் காதலன் அஃப்தாப் பூனாவாலா, ஸ்ரத்தாவின் உடலை 35 துண்டுகளாக வெட்டி டெல்லியை சுற்றி வீசியதாக டெல்லி போலீஸாரிடம் தெரிவித்துள்ளான். போலீஸாரின் விசாரணையில் மேலும் சில தகவல்கள் கிடைத்துள்ளது. இது தொடர்பாக போலீஸார் கூறுகையில், “மே 18ம் தேதி கொலை நடந்த தினத்தன்று இரவு 8 மணிக்கு வீட்டிற்கு தேவையான சாமான்கள் வாங்குவது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வீட்டிற்கு வேண்டிய பொருள்களை வாங்க யார் பணம் கொடுப்பது என்பதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இச்சண்டை பெரிய அளவில் முற்றியதால் ஸ்ரத்தாவை கீழே தள்ளி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் பூனாவாலா. ஏற்கனவே அவர்களுக்குள் பிரச்னை இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அன்று இரவு முழுவதும் உடல் கொலை செய்யப்பட்ட அறையில் கிடந்தது. காலையில்தான் உடலை வெட்டுவதற்கான கத்தி, பிளாஸ்டிக் கவர் மற்றும் புதிய பிரிட்ஜ் போன்றவற்றை வாங்கி வந்துள்ளான். ஏற்கனவே சமையல் கலை நிபுணரான பூனாவாலா எப்படி உடலை வெட்டவேண்டும் என்று தெரிந்து வைத்திருந்தான். ஸ்ரத்தாவின் உடலை வெட்டி ஒவ்வொரு பிளாஸ்டிக் கவரிலும் போட்டு பிரிட்ஜில் எடுத்து அடுக்கி வைத்தான். அதன் பிறகு ஒவ்வொன்றாக எடுத்துச்சென்று அருகில் உள்ள வனப்பகுதியில் போட்டுள்ளான். அவ்வாறு போடப்பட்ட பிளாஸ்டிக் கவர்களில் இருந்த சில உடல் பகுதியை போலீஸார் பூனாவாலாவை அழைத்து சென்று கைப்பற்றி இருக்கின்றனர்” என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மும்பையில் தனியாக வீடு எடுத்து வசித்த போதே பூனாவாலாவிற்கும், ஸ்ரத்தாவிற்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இருவருமே ஒருவர் மீது ஒருவர் சந்தேகப்பட்டுள்ளனர். எனவேதான் அடிக்கடி சண்டை நடந்ததாக இருவரின் நண்பர்களும் தெரிவித்தனர். அதோடு ஸ்ரத்தா மற்றும் பூனாவாலா இருவரின் வீட்டிலும் அவர்களின் உறவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவேதான் இருவரும் டெல்லிக்கு சென்றுள்ளனர். முதலில் ஹிமாச்சல பிரதேசத்திற்கு சென்றுவிட்டு அங்கிருந்து டெல்லிக்கு வந்த சில நாள்களிலேயே இக்கொலை நடந்துள்ளது. டெல்லிக்கு சென்ற பிறகு சில நாள்கள் இருவரும் ஹோட்டலில் அறை எடுத்து தங்கி இருந்துள்ளனர். அதன் பிறகுதான் வாடகைக்கு வீடு எடுத்துள்ளனர். ஸ்ரத்தாவை கொலை செய்ய பயன்படுத்திய கத்தி, ஸ்ரத்தாவின் ஆடைகள், மொபைல் போன், தலை போன்ற எதுவும் இது வரை போலீஸாரிடம் சிக்கவில்லை

10 நாள்கள் கொலையை தள்ளிப்போட்ட பூனாவாலா

போலீஸாரின் விசாரணையில் மே 18-ம் தேதிக்கு முன்பு 10 நாட்களுக்கு முன்பே கொலை செய்ய திட்டமிட்டதாக பூனாவாலா தெரிவித்துள்ளார்.

கொலை நடந்த தினத்திற்கு 10 நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே கடுமையான சண்டை நடந்துள்ளது. அன்றே கழுத்தை நெரித்து கொலை செய்ய திட்டமிட்டதாக பூனாவாலா தெரிவித்துள்ளான். ஆனால் கொலை செய்ய திட்டமிட்டபோது திடீரென உணர்ச்சி வசப்பட்டு ஸ்ரத்தா அழுததாகவும், எனவே கொலை செய்யும் திட்டத்தை கைவிட்டுவிட்டதாக தெரிவித்துள்ளான். பூனாவாலா வேறு ஒரு பெண்ணுடன் அடிக்கடி போனில் பேசுவதாகவும், அப்பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் ஸ்ரத்தா சந்தேகப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்த பிறகும் ஸ்ரத்தாவின் முகத்தை தினமும் பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்ததாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். ஸ்ரத்தாவின் தந்தை விகாஸ் முன்பு பூனாவாலா கொண்டு வரப்பட்டு விசாரிக்கப்பட்டான். அவர் முன்பும் ஸ்ரத்தா உயிரோடு இல்லை என்று பூனாவாலா தெரிவித்தான். விகாஸ் தனது மகளுடன் ஒரு ஆண்டுக்கும் மேலாக எந்த வித தொடர்பிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.