இஸ்லாமாபாத்: பயங்கரவாதம் பாகிஸ்தானின் முக்கிய பிரச்னையாக உள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கவலை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் பயங்கரவாத செயல்பாடுகள் அதிகரித்து வருவதாகவும், அதனை அந்நாடு கட்டுப்படுத்த வேண்டும் எனவும் இந்தியா உள்ளிட்ட உலகின் பல நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. ஐ.நா.,வில் கூட பல நாடுகளும் பயங்கரவாதத்தை குறிப்பிட்டு பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டியிருக்கின்றன. ஆனால், தற்போது தான் பயங்கரவாதம் முதன்மையான பிரச்னையாக உள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வாவின் லக்கி மார்வாட்டில் போலீஸ் வேன் மீது மோட்டார் சைக்களில் வந்த இரு பயங்கரவாதிகள் நேற்று (நவ.,16) தாக்குதல் நடத்தினர். இதில் 6 போலீசார் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வெளியிட்ட அறிக்கையில்,
‛பயங்கரவாதம் பாகிஸ்தானின் முதன்மையான பிரச்னைகளில் ஒன்றாகத் தொடர்கிறது. நமது ஆயுதப் படைகளும், காவல்துறையும் வீரத்துடன் போராடி வருகின்றன. லக்கி மார்வாட்டில் போலீஸ் வேன் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைக் கண்டிக்க வார்த்தைகள் போதாது’ எனத் தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement