தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை துன்புறுத்தப்படுவதாக பீட்டா போன்ற அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதன் காரணமாக மத்திய அரசு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடை விதித்திருந்தது. இந்த தடைக்கு எதிராக தமிழகத்தில் மாபெரும் போராட்டம் வெடித்தது. இதனை அடுத்து தமிழக அரசால் சட்டப்பேரவையில் அவசரச் சட்டம் இயற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதல் பெறப்பட்டது. இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன.
இந்த அவசர சட்டத்தை எதிர்த்து பீட்டா அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. நீண்ட நாட்களாக உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கின் விசாரணை தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை வரும் 23ஆம் தேதி தொடங்கும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு வழக்கு சம்பந்தமான கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டியுள்ளதால் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தது.
தமிழக அரசின் கோரிக்கைக்கு எதிராக பீட்டா உள்ளீட்டு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசின் கோரிக்கை நிராகரித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நவம்பர் 23ஆம் தேதி விசாரணை துவங்கும் என உத்தரவிட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கு மீண்டும் தடை வருமா அல்லது அனுமதி வழங்கப்படுமா என ஜல்லிக்கட்டு வீரர்களும், காளை வளர்ப்போறும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.