மெட்ராஸ் ஐ எனப்படும் கண் தொற்று பாதிப்பு, தற்போது சென்னையில் பரவலாக பரவி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலங்களில் கண் தொற்று பரவல் ஏற்படுகிறது. கண் விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்று ‘மெட்ராஸ் ஐ’ என்று அழைக்கப்படுகிறது. இது காற்று வழியாகவும், தொற்று ஏற்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்கள் வழியாகவும் பரவக் கூடும்.
‘மெட்ராஸ் ஐ’ பாதிப்பு ஏற்பட்டால் கண் எரிச்சல், வீக்கம், உறுத்தல், விழிப்பகுதி சிவத்தல், கண்ணில் நீர் சுரத்தல், இமை ஒட்டிக்கொள்ளுதல் போன்ற தொந்தரவுகளை தரும்.
இந்த தொற்று அண்மைக்காலமாக கணிசமாக பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தொற்றுக் குறிப்பாக குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் அதிகளவில் பிரச்சனையை ஏற்படுத்துவதாக் கண் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனைகளில் கடந்த வாரம் வரை 5 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நாள்தோறும் 50-க்கும் மேற்பட்டவர்கள் இந்த பாதிப்புக்காக சிகிச்சை பெற வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது எளிதில் குணப்படுத்தக்கூடிய மிகச் சாதாரணமான நோய் தொற்று தான் அதனால் அதனை முதலிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், மெட்ராஸ் ஐ தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் பயன்படுத்திய துணி, சோப்பு உள்ளிட்டவற்றை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது. இது மற்றவர்களுக்கு எளிதில் பரவும் தன்மை கொண்டது குறிப்பிடத்தக்கது.