புதுடெல்லி: இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ரயில் பாகங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள், சமீப காலமாக மாடுகள் மீது மோதிய விபத்துகள் அடிக்கடி நடந்தன. குறிப்பாக, குஜராத்தில் அடுத்தடுத்த நாட்கள் எருமை, பசுக்கள் மீது மோதியதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இந்தாண்டு மட்டுமே மாடுகள் குறுக்கே வந்ததால், 4 ஆயிரம் ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளன. இது போன்ற விபத்துக்கள் வடக்கு ரயில்வே, வட மத்திய ரயில்வேக்கு உட்பட்ட பகுதிகளில் தான் அடிக்கடி நிகழ்கின்றன. இந்நிலையில், ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று கூறுகையில், ‘மாடுகள் தண்டவாளத்தில் புகுந்து விபத்து ஏற்படுவதை தடுக்க 1000 கிமீ துாரத்துக்கு தடுப்பு சுவர்கள் கட்டப்படும்,’’ என்றார். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில், வட மத்திய ரயில்வேயில் கடந்த 2020-21ம் ஆண்டில் இதுபோன்று 6,500 சம்பவங்கள் நடந்ததாக கூறப்பட்டுள்ளது.