ஹூப்பள்ளி: கர்நாடகாவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினராக ஷிக்காலிகர்கள் உள்ளனர். இந்த பிரிவை சேர்ந்த ஒரு தம்பதிக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. கணவனை கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்படி மனைவி கட்டாயப்படுத்தி உள்ளார். இதற்கு ஒப்புக்கொள்ளாத கணவன், ஷிக்காலிகர் வகுப்பு தலைவர்களிடம் சென்று முறையிட்டார். இதையடுத்து, அந்த வகுப்பு தலைவர்கள் ஹூப்பள்ளி போலீஸ் நிலையம் சென்று, ‘ஷிக்காலிகர் வகுப்பை சேர்ந்தவர்களை கிறிஸ்தவ அமைப்பினர் கட்டாய மதமாற்றம் செய்கிறார்கள்.,’ என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புகார் அளித்த சம்பத் என்பவர் கூறுகையில், ‘சில பாஸ்டர்கள் எங்கள் உறவினர்கள் வீட்டுக்கு வந்து ஜெப கூட்டத்தில் பங்கேற்கும்படி கட்டாயப்படுத்தி உள்ளனர். ஷிக்காலிகர் வகுப்பை குறிவைத்து கிறிஸ்தவ அமைப்புகள் மத மாற்ற நடவடிக்கையில் ஈடுபடுகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் என்பதால் அவர்கள் எங்களை குறிவைக்கிறார்கள். இப்படி மதம் மாற மறுப்பவர்களை உள்ளூர் ரவுடிகளை கொண்டு மிரட்டும் பணியிலும் ஈடுபட்டுள்ளது’ என்றார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், ரவுடி, சில பாஸ்டர்கள் உள்பட 15 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.