புதுடெல்லி: ரிசர்வ் வங்கியுடன் ஆலோசனை நடத்தி, முன்கூட்டிய ஏற்பாடுகள் செய்த பிறகே பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு கூறியிருக்கிறது. கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி ஒன்றிய அரசு ரூ. 1000, ரூ. 500 நோட்டுகள் செல்லாது என பணமதிப்பிழப்பு நடவடிக்கையை திடீரென அமல்படுத்தியது. இந்த நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 58 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்படுகிறது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஒன்றிய அரசு தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பணமதிப்பிழப்பு நடவடிக்கையானது நன்கு பரிசீலிக்கப்பட்ட முடிவாகும். இது, கருப்பு பணம், போலி ரூபாய் நோட்டுகள், தீவிரவாதத்திற்கு நிதி அளித்தல், வரி ஏய்ப்பு போன்றவற்றை எதிர்த்து போராடுவதற்கான உத்தியின் ஒருபகுதியாகும். இது மிகவும் பயனுள்ள நடவடிக்கை. மேலும், ரிசர்வ் வங்கி சட்டம், 1934 மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு இணங்க, சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு மேற்கொள்ளப்பட்ட பொருளாதார கொள்கை முடிவாகும். பணமதிப்பு அமலுக்கு வருவதற்கு முன் முன்கூட்டியே அதற்கான ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டன. இவ்வாறு பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. நீதிபதிகள் விசாரணையை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.