புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் தமிழர்கள் வாழும் பகுதியாக அனுமன் காட் உள்ளது. கங்கைகரையில் ஹரிச்சந்திரா காட்டிற்குஅருகில் இது உள்ளது. தனது தந்தை இறந்த பின் இங்குள்ள தனது மாமா வீட்டுக்கு மகாகவி பாரதியார் அனுப்பி வைக்கப்பட்டார். நான்கு ஆண்டுக்கு மேல் வாரணாசியில் வாழ்ந்த பாரதியார் இன்றும் உ.பி. மக்களால் நினைவுகூரப்படுகிறார்.
இதனால் தமிழ் பிராமணர்கள் வாழும் பகுதியான அனுமர் காட் முன்பாக பாரதியாருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. வாரணாசியில் உள்ள தமிழர்கள் மடமான நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரம் சார்பில் இச்சிலை பராமரிக்கப்படுகிறது.
இச்சூழலில் பாரதியார் வாழ்ந்த வீட்டில் அவருக்காக ஒரு நினைவிடம் அமைக்க தமிழக முதல்வராக பதவி ஏற்ற பின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதுதொடர்பாக கடந்த ஜுலை 5-ல் தமிழக அரசு ஆணை வெளியிட்டது.
ஒரு மாதம் நடைபெறும்: அதன்படி தமிழக அரசின் பொதுப்பணித் துறை சார்பில் பாரதியார் இல்லத்தில் அவர்தங்கியிருந்த அறை நினைவிட மாக்கப்படுகிறது. இதற்கான பணிகள் 3 மாதங்களாக நடை பெற்று வருகின்றன. வரும் 17-ல் தொடங்கி ஒரு மாதம் நடைபெறும் ‘காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்ச்சிக்குள், பாரதி அறையை நினைவிடமாக்கும் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் பாரதியாரின் பேத்தியும் இசையில் முனைவர் பட்டம் பெற்றவருமான ஜெயந்தி முரளி கூறியதாவது:
காசியில் யோகி, மகாத்மா என பல அறிஞர்கள் வாழ்ந்ததுஉண்டு. இவர்களில் எங்கள் தாத்தா பாரதியாரும் இடம்பெற்றிருப்பதற்கு காரணம் அவர் இன்றும் நிகழ்கால கவியாக உள்ளார். தற்போது நடைபெறும் சங்கமம் என்பதை சுமார் 140 வருடங்களுக்கு முன்பாக அன்றே இந்தக் கவி கூறியிருந்தார். ‘கங்கை நதிப்புரத்து கோதுமை பண்டம். காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்…’ என வடக்கையும், தெற்கையும் இணைக்கும் வகை யில் பாடியிருந்தார்.
வரலாற்று சிறப்புமிக்க அந்த அறையில் பாரதியின் நூல்களுடன் மார்பளவு சிலையும் அமைக்கின்றனர். இப்பணி முடிந்து நினைவகம் எப்போது திறக்கப்படும் எனத் தெரியவில்லை. இவ்வாறு ஜெயந்தி முரளி கூறினார்.
பாரதியாரின் சொந்த அத்தைகுப்பம்மாள் (ருக்மணி) அக்காலத்தில் வாரணாசியில் வாழ்ந்து வந்தார். அவரது மகன் கேதார்நாத் சிவன் என்பவருக்கும் பாரதியின் தங்கை லட்சுமி அம்மாளுக்கும் மணமுடிக்கப்பட்டிருந்தது.
இவர்கள் தமிழர்கள் வாழும் அனுமன் காட் பகுதியில் வசித்தனர். இந்த வீட்டுக்கு தனது இளம் வயதில் பாரதி அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.
வாரணாசியில் தனது அத்தை மற்றும் தங்கை குடும்பத்துடன் வாழ்ந்த பாரதியார், அங்குள்ள ஜெயநாராயண் இன்டெர் காலேஜ் பள்ளியில் 9-ம் வகுப்பில் சேர்க்கப் பட்டிருந்தார். ஆனால், அவர் பள்ளிக்குச் சென்று பயிலவில்லை. அந்த நேரங்களில் கங்கை கரையில் பல்வேறு மாநில மக்களுடன்பேசிவந்த பாரதி, இந்தி, சம்ஸ்கிருதம், பெங்காலி, போஜ்புரி, அவதி உள்ளிட்ட பல மொழிகளை கற்றுள்ளார்.
தற்போது சிவமடம் வீட்டில் பாரதியின் அத்தை பேரனும், தங்கை மகனுமான கே.வி.கிருஷ்ணன் (96) தனது மகன் மற்றும் மகள் ஜெயந்தி குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகிறார்.