மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத், தனது சொந்த ஊரான சிந்த்வாராவுக்கு மூன்று நாள் பயணமாகச் சென்றார். அங்கு கமல்நாத் ஆதரவாளர்கள் அவரின் 76-வது பிறந்தநாளை கொண்டாட முடிவு செய்தனர். கமல்நாத்துக்கு நவம்பர் 18-ம் தேதிதான் பிறந்த நாள். ஆனால் சொந்த ஊருக்கு வந்ததால் அங்கேயே பிறந்த நாளை கொண்டாட முடிவு செய்து கேக் வாங்கி வரப்பட்டது. கமல்நாத் ஆதரவாளர்கள் வாங்கி வந்த கேக் ஹனுமான் கோயில் வடிவத்தில் இருந்தது. அதனை கமல்நாத் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார். ஆனால் கோயில் வடிவ கேக் வெட்டி இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்திவிட்டதாக கமல்நாத் மீது மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் குற்றம் சாட்டி இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “கமல்நாத்தும், அவரின் போலி பக்தர்களும் இந்து மதத்திற்காக எதையும் செய்யவில்லை. கமல்நாத் இருக்கும் கட்சிதான் ராமர் கோயில் கட்ட எதிர்ப்பு தெரிவித்தது. அது தேர்தலில் அவர்களை மோசமாக பாதித்தது. எனவே கமல்நாத் மீண்டும் ஹனுமான் பக்தராகி இருக்கிறார். ஹனுமான் படத்தை கேக்கில் போட்டு அதனை வெட்டி இருக்கின்றனர்.
யாராவது கடவுளின் படம் இருக்கும் கேக்கை வெட்டுவார்களா? இது இந்து மதத்தையும், சனாதன பாரம்பரியத்தையும் அவமதிப்பதாகும்” என்று தெரிவித்துள்ளார்.
கமல்நாத் தனது சொந்த ஊரில் உள்ள வீட்டில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. மத்திய பிரதேசத்தில் கமல்நாத் ஆட்சிதான் நடந்து கொண்டிருந்தது. ஆனால் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் மாதவ்ராவ் சிந்தியா மகன், தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் சேர்ந்தார். இதனால் கமல்நாத் அரசு கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.