HBDRoja: நடிகை டு அமைச்சர்: ரோஜா அரசியலில் பெண் ஆளுமையாக உருவானது எப்படி?

நடிகர்கள் அரசியலுக்கு வருவது சாதாரணமான ஒன்று. ஆனால் நடிகைகளுக்கு அப்படி அல்ல. ஒரு நடிகை அரசியலில் சாதித்து அமைச்சர் ஆவதெல்லாம் அவ்வளவு எளிதல்ல. பொது வாழ்க்கைக்கு வரும் நடிகைகளை அவதூறாக பேசி அவர்களின் ஒட்டு மொத்த குடும்பத்தையும் இழிவு படுத்திவிடுவார்கள். அப்படி பல தடைகளை தாண்டி இன்று இந்திய அரசியலில் ஆளுமை மிக்க பெண்ணாக உயர்ந்து நிற்கிறார் ரோஜா. ரோஜா பிறந்தநாளான இன்று அவர் குறித்த சில சுவாரஸ்ய தகவல்களை காணலாம். 

செம்பருத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரோஜா. அப்படத்தை இயக்கிய இயக்குநர் செல்வமணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 90-களின் இறுதியில் கொடி கட்டி பறந்த நடிகை ரோஜா அரசியல் பக்கம் தனது ஆர்வத்தை திருப்பினார். தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்த அவர் இரவு பகல் பாராமல் அக்கட்சிக்காக தேர்தல் சமயங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கும் இவருக்கும் இடையே பிரச்சனை வெடித்தது. 

ரோஜாவுக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தார். ஆனால் அவருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் பிரச்சாரம் செய்ய விடாமல் பல தடங்கல்கள் ரோஜாவுக்கு கட்சியின் மூத்த நிர்வாகிகளால் ஏற்பட்டது. ரோஜா பிரச்சாரம் செய்த பல தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றது. 

ஆனால் ரோஜா தோற்றுப்போனார். அதோடு அவருக்கு அந்த கட்சியில் எதிர்பார்த்த மரியாதை கிடைக்காமல் போனது. 

இதனால் அக்கட்சியில் இருந்து விலகிய ரோஜா, காங்கிரஸ் கட்சியில் இணைய நினைத்தார். அந்த சமயத்தில் தான் ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த ரோஜாவின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியானது. ஆனால் அதிரடியாக ஒரு முடிவெடுத்தார் ரோஜா. 

ஆம், ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கிய ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அந்த சமயத்தில் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் அரசியலில் ஜெயிக்க வேண்டிய நிர்பந்தம் இருந்தது. இதனையடுத்து 2014-ம் ஆண்டு ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் சார்பில் நகரி தொகுதியில் போட்டியிட்டார் ரோஜா. அரசியலில் ராசி இல்லாதவர் என விமர்சனம் செய்யப்பட்ட அவர், அந்த தேர்தலில் வெற்றி பெற்று விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்தார்.

ஆனாலும் அந்த முறை ஜெகன் மோகன் ரெட்டியால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. இதனைத்தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியை மட்டுமே மையப்படுத்தி பிரச்சாரம் செய்தார் ரோஜா. அவரின் பிரச்சாரங்கள் ஒவ்வொன்றும் மக்களை சென்றடைந்தது. அந்த தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று முதல்முறையாக முதலமைச்சராக வெற்றி பெற்றார் ஜெகன் மோகன் ரெட்டி. அப்போது அமைச்சரவையில் ரோஜாவுக்கு இடம் கிடைக்கும் என பேசப்பட்ட நிலையில், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

இதனால் அப்செட் ஆன ரோஜாவுக்கு மாநில தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு வாரியத்தின் தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டது. ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்ததும், தனது அமைச்சரவை இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படும் என்று கூறியிருந்தார். அதற்கேற்ப கடந்த ஏப்ரல் மாதம் அவரது அமைச்சரவையில் இருந்த 24 பேரும் ராஜினாமா செய்த நிலையில், புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். இதில் ரோஜாவும் ஒருவர். 

ரோஜா முதல்முறையாக அமைச்சராக பொறுப்பேற்றார். பழைய அமைச்சர்கள் பட்டியலில் இருந்து 11 பேரும், புதிதாக 14 பேரும் தேர்வு செய்யப்பட்டனர்.

 தற்போது அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் ரோஜா இந்திய அரசியலில் அசைக்க முடியாத பெண் ஆளுமைகளில் ஒருவராக உயர்ந்து நிற்கிறார். நடிகையாக தனது பயணத்தை தொடங்கிய ரோஜா கடந்த ஏப்ரல் மாதம் பல சோதனைகளை கடந்து அமைச்சராக பதவியேற்றுள்ளார். அரசியலில் சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு இவர் ஒரு வழிகாட்டி. ஹேப்பி பர்த்டே ரோஜா!!

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.