SETC-யில் சென்னை டூ பம்பா விலை எவ்ளோ தெரியுமா? சபரிமலைக்கு அரசு பேருந்து சேவைகள்!

சென்னையில் இருந்து பம்பாவுக்கு இப்போது வரை நாள் ஒன்றுக்கு 4 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதில் ஒருவருக்கு ரூ.1,090 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கார்த்திகை முதல் நாளான இன்று, துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர். இதற்காக இன்று அதிகாலை முதலே ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள ஐயப்ப பக்தர்களும், அவர்களுக்கு வசதியுள்ள கோயில்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து மாலை அணிந்து விரத்ததை தொடங்கினர். இன்று தொடங்கி தொடர்ந்து 41 நாள்கள் விரதத்தை மேற்கொள்ள ஏதுவாக கார்த்திகை முதல் நாளிலேயே பக்தர்கள் மாலை அணிவர்.
image
கடந்த 2 வருடங்களாக கொரானா பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் அதிகமாக இருந்ததால் பக்தர்கள் சபரிமலை சென்று வருவதில் சிரமம் இருந்தது. தற்போது இயல்புநிலை திரும்பி இருப்பதால்  இந்த ஆண்டு ஏராளமான பக்தர்கள் ஆர்வமும் ஐயப்பனை தரிசிக்க மாலை அணிந்து வருகின்றனர்.
கேரளாவில் உள்ள சபரிமலை கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் செல்வார்கள். இதில் தமிழ்நாட்டிலிருந்து பெருவாரியானவர்கள் செல்லவுள்ளனர். அதையொட்டி, அவர்களுக்காக தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று அறிவித்திருந்தார். 
image
இப்பேருந்துகள் தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கடலூர் ஆகிய நான்கு இடங்களிலிருந்து பம்பா வரை அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள் மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள சிறப்புப் பேருந்துகளாக இயக்கப்படவுள்ளன. இன்று முதல் ஜன.20 வரை இந்த பேருந்து சேவைகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இன்று பலரும் மாலை போட்டுக்கொண்டுள்ள நிலையில், இன்று முதல் சபரிமலையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். மேற்கொண்டு பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, தேவைக்கேற்ப பேருந்துகள் எண்ணிக்கையும் உயரக்கூடும் என தெரிவிக்கப்படுள்ளது.
இதில் சென்னை டூ பம்பா அல்லது நிலக்கல் வரையிலான குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள பேருந்துகளில் பெரியவர்களில் ஒருவருக்கு ரூ.1,090 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் என்றால், ஒருவருக்கு 545 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
image
30 நாட்களுக்கு முன்பே இப்பேருந்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம். தமிழ்நாடு அரசின் www.tnstc.in என்ற இணையதளத்திலோ, டிஎன்எஸ்டிசி செயலி வழியாகவோ பயனர்கள் முன்பதிவு செய்யலாம். மேலும், பேருந்துகளின் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்கு, 9445014452, 9445017793, 9445014424, 9445014463 மற்றும் 9445014416 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது.
இதேபோன்று கார்த்திகை மாதத்தையொட்டி பூஜை பொருள் விற்பனை செய்யும் கடைகளிலும் கூட்டம் அலை மோதி வருகின்றது. மக்கள் பலரும் துளசி மாலை, வேட்டி உள்ளிட்ட பூஜை பொருள்கள் வங்க பக்கங்கள் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.