புதுடெல்லி,
அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு வருகிற நவம்பர் 30-ந்தேதிக்கு தள்ளி வைத்தது.
இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சுதான்சு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. பொது குழு விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி கடந்த வாரம் பதில் மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த பதில் மனுவுக்கு விளக்க மனு தாக்கல் செய்யும் வகையில் விசாரணையை தள்ளி வைக்க வேண்டுமென வைரமுத்து சார்பில் ஆஜரான வக்கீல் கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பாக கோரிக்கை கடிதம் அளிக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகளிடம் தெரிவித்த போது, நீதிபதிகள் அது தொடர்பான கோரிக்கை கடிதம் எங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் விசாரணையை தள்ளி வைக்க கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் அளிக்கப்பட்ட கடிதம் மட்டுமே தங்களுக்கு கிடைத்ததாகவும் அதன் வாயிலாகத்தான் தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை கடிதத்தை நாங்கள் அறிந்து கொண்டோம் என்றும் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான வக்கீல்கள், சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகள் காரணமாக, திருத்தப்பட்ட அதிமுக விதிகளை தேர்தல் ஆணையம் வெளியிட மறுக்கிறது என்ற வாதத்தை முன் வைத்தனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நவம்பர் 30-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர். அதற்குள் விளக்க மனு தாக்கல் செய்யவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது.