பியாங்கியாங்: ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ், அமெரிக்காவின் கைப்பாவையாக செயல்படுகிறார் என்று வடகொரியா குற்றாம்சாட்டியுள்ளது.
வடகொரியாவின் சமீபத்திய ஏவுகணை பரிசோதனைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும், ஜப்பானின் வலியுறுத்தல்படி வடகொரியாவின் மீது பொருளாதாரத் தடை விதிக்கவும் ஐக்கிய நாடுகள் சபை ஆயத்தமாகி வருகிறது. இதனை வடகொரியா விமர்சித்துள்ளது
இதுகுறித்து வடகொரிய வெளியுறவுத் துறை அமைச்சர் சோ சன் கூறும்போது, “ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸும் வெள்ளை மாளிகையில் ஒரு உறுப்பினர்தான் என்று நினைக்கிறேன். வடகொரியாவுக்கு எதிராக ஐ.நா. மோசமான அணுகுமுறைகளை எடுத்ததற்கு நான் வருந்துகிறேன். ஐ.நா. சபை பாரபட்சமாக நடந்து கொள்கிறது. அதன் பொதுச் செயலாளர், அமெரிக்காவின் கைப்பாவையாக செயல்படுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.
வட கொரியாவின் கண்டம்விட்டு கண்டம் பாயும் சோதனையை தென்கொரிய அரசும் உறுதிப்படுத்தியுள்ளது. வட கொரியாவின் ஏவுகணை சோதனை சட்டவிரோதமானது மற்றும் பொறுப்பற்றத் தன்மை கொண்டது. இதற்கான விலையை வடகொரியா பெறும் என்று என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் கடுமையாக விமர்சித்தன.
முன்னதாக, இம்மாத தொடக்கத்தில் வடகொரியா ஒரே நாளில் 20-க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இதனால், கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவியது. வடகொரியாவின் செயலுக்கு பல்வேறு எதிர்வினைகள் எழுந்தும் வட கொரியா தனது ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
கரோனா காரணமாக மோசமான நிலையை அடைந்துள்ள பொருளாதாரத்தைக் கவனிக்காமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேற்கொள்வதிலேயே கவனம் செலுத்தி ஐக்கிய நாடுகள் சபையும் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.