சிவாஜி, எம்.ஜி.ஆர். காலகட்டத்தில் தனித்துவமான வசனங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் ஆரூர்தாஸ். தமிழ் திரையுலகின் பிதாமகராக போற்றப்பட்ட அவர் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 91.
ஆரூர்தாஸின் நினைவுகள் குறித்து நடிகர் எம்.எஸ்.பாஸ்கரிடம் கேட்டேன். நாகர்கோவிலில் படப்பிடிப்பு ஒன்றில் இருந்தவர், வருத்தம் தொய்ந்த குரலில் பேசினார். ”ஐயா ஆரூர்தாஸ் அவர்கள் எனக்கு டப்பிங்கில் குரு. டப்பிங்கை கற்றுக்கொடுத்த ஒரு ஆசான். தயாரிப்பாளர் கே.பாலாஜி சாரோட ‘சந்தேகக் கண்கள்’ படத்தின் மொழிமாற்ற வேலைகளில் தான் அவரைப் பார்த்தேன். மலையாளத்தில் இருந்து தமிழுக்கு டப் ஆன படம் அது. ஆரூர்தாஸ் ஐயாவுக்கு திருவாரூர். எனக்கு முத்துப்பேட்டைனால, என் மீது தனி பாசம் வைத்திருப்பவர். ‘சந்தேகக் கண்கள்’ல இருந்து அவர் எழுதும் படங்கள் அத்தனைக்கும் வரிசையாக நானும் பேசிட்டு வந்தேன்.
‘டப்பிங்கின் போது எப்படி பேசணும்? எங்கே உதட்டை மூடணும். பாதி சவுண்ட் எந்த இடத்தில் கொடுக்கணும்..? எங்கே அழுத்திப் பேசணும்’ இப்படி தொழில் ரகசியங்களை எனக்குக் கத்துக்கொடுத்தார். அவர் கத்துக்கொடுத்த வித்தைகள் தான் இன்றுவரை என்னை காப்பாற்றிக்கொண்டிருக்கிறது. என்றும் காப்பாற்றும். ஐயா எம்.ஜி.ஆர்., எங்க அப்பா சிவாஜி அவர்களின் படங்களுக்கு வசனம் எழுதியவர். வசனங்களை வாரிவாரி எழுதிய வள்ளல் அவர்.
அப்புறம் நான் நடிகன் ஆனபிறகு அவருடைய படங்களுக்கு பேசுவதற்கான நேரம் அமையல. அவருடைய துணைவியார் மறைவிற்கு பிறகு அவரும் உடைந்து போயிருந்தார். என்னுடைய மகள் திருமணத்தின் போது அவருக்கு அழைப்பிதழ் கொடுக்கப் போயிந்தபோது சந்தித்தேன். வயது மூப்பின் காரணமாக வெளியே எங்கும் செல்லமுடியாமல் இருந்ததைச் சொன்னவர் ‘உன் மகள் எங்கிருந்தாலும் நல்லா இருக்கட்டும் பாஸ்கர்’னு சொல்லி வாழ்த்தினார்.
இடையே கொரோனா காலகட்டம் என்பதால் அவரும் பலரை சந்திக்க மறுத்தார். நானும் அவருடைய வயது காரணமாக அவருக்கு ஒருவேளை தொற்று ஏதும் பரவிடக்கூடாது என்பதால் அவரைச் சந்திக்காமல் இருந்தேன். என் மகள் திருமணம் முடிந்த பிறகு அவரைப் போய் பார்த்தேன். ‘உன் மகள் மாதா அருளால் நல்லா இருக்கட்டும்’ என்று மீண்டும் ஆசீர்வதித்தார். நல்லபடியாக வாழ்ந்தார். பொறுப்புள்ள குடும்பத்தலைவனாகவும், குழந்தைகளுக்கு நல்ல அப்பாவாகவும், தாத்தாவாகவும் என்னைப் போன்றோருக்கு ஆசான் ஆகவும், நடிகர் திலகத்தின் மீதும், மக்கள் திலகத்தின் மீதும் மாறாத பற்றுகொண்டவராகவும் வாழ்ந்தார். அவருடைய மறைவு வேதனையாக இருந்தாலும், அவருடைய ஆன்மா என்றென்றும் நம்மை வழிநடத்த வேண்டும். வழி நடத்தும்.”