இவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை: முதல்வர் ஸ்டாலின் உறுதி..!

மாற்றுத்தினாளிகளை திருமணம் செய்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகள் அல்லாதவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை மற்றும் கீதாபவன் அறக்கட்டளை இணைந்து ஏற்பாடு செய்த 54 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கான திருமணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து நடத்தி வைத்தார்.

இந்த விழாவில் பேசிய முதல்வர், “உடலால் ஏற்பட்ட குறைபாட்டை தன்னம்பிக்கையால் வெல்லக்கூடிய ஆற்றல் படைத்த உங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் என்று சுயமரியாதை பெயர் சூட்டி வாஞ்சையோடு அழைத்தவர் நம்முடைய தலைவர் கருணாநிதி. இதன் மூலமாக உங்கள் அனைவருக்கும் பெயர் சூட்டிய தந்தைதான் அவர்.

திமுக ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 வகையிலான கருவிகள் 36 மாதிரிகளில் 7,219 கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டது. நகர பஸ்களில் மாற்றுத்திறனாளிகள் துணையாளர் ஒருவருடன் கட்டணம் இல்லாமல் பயணம். 1,096 பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாற்றுத்திறனாளிகள் நலனுக்கென 2021 – 2022-ம் நிதியாண்டில் 813 கோடியே 63 லட்சம் ரூபாயும், 2022 – 2023 நிதியாண்டில் 838 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் திட்டம் உலக வங்கி உதவியுடன் 6 ஆண்டு காலத்திற்கு 1,702 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் திருமண உதவித்திட்டத்தின் மூலமாக தற்போது வழங்கப்பட்டு வரும் நிதி உதவியையும் பரிசுத்தொகையாக, பாதித்தொகை ரொக்கமாகவும், மீதமுள்ள தொகையை தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கும் முறையை மாற்றி முழுத்தொகையும் ரொக்கமாக வழங்கப்படும் திட்டத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளின் கூட்டமைப்பு அறக்கட்டளை தலைவர் சிம்மசந்திரன் பேசுகிறபோது, ‘மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகள் அல்லாதவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கைகள் குறித்தும் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். அறிவித்துவிட்டு போய்விடலாம், அதை நிறைவேற்ற வேண்டும். அதுதான் திமுக ஆட்சி. அந்தநிலையில் இருந்து, நிச்சயம் அதையும் நிறைவேற்றி தருவோம்”என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.