சிங்கப்பூர் முன்னாள் அதிபர் இறுதிச் சடங்கில் ஒலித்த தேவா பாடல்.. நினைவுக்கூர்ந்த ரஜினி!

தமிழ் சினிமாவின் மிக முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கும் தேனிசைத் தென்றல் தேவாவின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று (நவ.,20) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் அவரது இசைக் கச்சேரி நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், இசையமைப்பாளர்கள், அனிருத், ஸ்ரீகாந்த் தேவா, நடிகை மீனா, மாளவிகா, நடிகர் ஜெய் உட்பட பலரும் பங்கேற்றிருந்தனர்.

ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் நடந்த இசைக் கச்சேரியின் வீடியோக்கள் பலவும் #DevaTheDeva என்ற ஹேஷ்டேக்கின் கீழ் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அதில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய வீடியோதான் பட்டித்தொட்டியெங்கும் பரவிக் கொண்டிருக்கிறது.

அது என்னவெனில், தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட சிங்கப்பூரின் ஆறாவது அதிபராக இருந்த எஸ்.ஆர்.நாதன் தன்னுடைய இறுதிச் சடங்கின் போது தேவாவின் இசையமைத்த பொற்காலம் படத்தில் இடம்பெற்ற “தஞ்சாவூரு மண்ணு எடுத்து” பாடலை ஒலிக்கச் செய்யும்படி கூறியிருந்தார்.

அதன்படியே நாதனின் இறுதிச் சடங்கின் போது அந்த பாடல் ஒலிக்கப்பட்டதோடு, சிங்கப்பூர் மட்டுமல்லாமல் மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளிலும் அந்த நிகழ்வு குறித்த செய்தி பரவி, தேவா இசையமைத்த பாடலை மொழிப்பெயர்த்தும் ஒலிக்கச் செய்திருக்கிறார்கள்.

இந்த நிகழ்வை தேவாவின் இசைக் கச்சேரியின் மேடையின் பகிர்ந்த நடிகர் ரஜினி, மற்ற நாடுகளில் உள்ளவர்களால் வெகுவாக பாராட்டப்பட்ட இசையமைப்பாளர் தேவாவின் படைப்பு குறித்து தமிழகத்தில் எந்த ஊடகத்திலும் செய்தியாக வெளியிடவில்லை என அதிருப்தியோடு கூறியதோடு, இதுப்போன்ற நிகழ்வுகளை கட்டாயம் தெரியப்படுத்துங்கள் எனவும் வலியுறுத்தியிருக்கிறார்.

இந்த வீடியோவை வைரலாக்கியதோடு, ரஜினி நினைவுக்கூர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அதிபர் நாதனின் இறுதிச் சடங்கின் போது ஒலிக்கப்பட்ட ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’ நிகழ்வின் வீடியோவையும் பகிரப்பட்டு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.