சிறிய மற்றும் நடுத்தர அளவு தொழில்முயற்சிகளின் அபிவிருத்திக்கு 2 பில்லியன் ரூபா ஒதுக்கீடு

2023 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் ஊடாக சிறிய மற்றும் நடுத்தர அளவு தொழில்முயற்சிகளின் அபிவிருத்திக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய அந்தத் துறைக்கு நிதி வழங்குவதற்கும் ஆதரவளிப்பதற்கும் 2 பில்லியன் ரூபாய் ஒதுக்கியிருப்பதாகப் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மற்றும் கைத்தொழில் அமைச்சர் கௌரவ (வைத்தியகலாநிதி) ரமேஷ் பதிரண அண்மையில் குறிப்பிட்டார்.

அண்மையில் இடம்பெற்ற கைத்தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்கள் தற்போதைய பொருளாதார நிலைமையில் சிறிய மற்றும் நடுத்தர அளவு தொழில்முயற்சிகளை (SMEs) கட்டியெழுப்புவது தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

படிப்படியாக ஆதரவு வழங்கப்படவேண்டிய சிறிய மற்றும் நடுத்தர அளவு தொழில்முயற்சியாளர்களை மதிப்பிடுவதற்கான முறையான பொறிமுறையொன்று தயாரிக்கப்பட வேண்டும் என இதன்போது குழு சுட்டிக்காட்டியது.

மேலும், டொலமைட் கைத்தொழில் தொடர்பிலும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. வெடி பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவு தொழில்முயற்சியாளர்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ள சிரமங்கள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, இந்த நிலைமையைச் சரி செய்வதற்குத் தலையிடுவதாகவும் வெடி பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் விசேட கவனம் செலுத்துவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பத்திக் கைத்தொழிலுக்குத் தேவையான மூலப்பொருட்களைப் பெற்றுக்கொள்ளும் போது காணப்படும் சிக்கல்கள், இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழில் சம்பந்தமான விடயங்கள் தொடர்பிலும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

இராஜாங்க அமைச்சர்களான பிரசன்ன ரணவீர, ஜானக வாக்கும்புற, சாமர சம்பத் தசநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன் புத்திக பதிரன, மதுர விதானகே, நாளக பண்டார கோட்டேகொட, சுமித் உடுக்கும்புற, மொஹமட் முஸம்மில் மற்றும் சஹன் பிரதீப் விதான ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.