கார்த்திகை மாதம் ஆன்மிகச் சிறப்புவாய்ந்த ஒன்று. இந்த மாதத்தில் சிவவழிபாடு மிக முக்கியமான ஒன்று. சிவபெருமான் அடிமுடி அறிய முடியாத அண்ணாமலையாக ஜோதி ஸ்வரூபமாக நின்ற காலம் கார்த்திகை மாதப் பௌர்ணமி. அந்த நாளில் நாம் வீடுகளிலும் கோயில்களிலும் விளக்குகள் ஏற்றி இறைவனை ஜோதிஸ்வரூபனாக தரிசனம் செய்கிறோம். அன்று மட்டுமல்ல கார்த்திகை மாதம் முழுவதுமே வீட்டு வாசலில் காலையும் மாலையும் விளக்கேற்றி வைக்கும் வழக்கம் உண்டு.
கார்த்திகை மாதத்தின் சிறப்புகளில் மிக முக்கியமானது கார்த்திகை சோமவார வழிபாடு. கார்த்திகை மாதத்தின் திங்கட்கிழமைகளில் செய்யப்படும் வழிபாடு. சோமன் என்றால் சந்திரன். சந்திரனுக்குரிய கிழமை என்பதால் அது திங்கட்கிழமை என வழக்கப்படலாயிற்று. சந்திரன் மனோகாரகன். நம் மனத்தின் அதிபதி. சந்திரன் வளர்வதும் தேய்வதுமாக இருக்கும். அதுபோலவே மனித மனத்திலும் மகிழ்ச்சியும் துக்கமும் மாறிமாறிவரும். சிவபெருமான் பிறைச் சந்திரனைத் தன் சடையில் சூடியவர். அதன்மூலம் சந்திரனின் சாபத்தை மாற்றியவர்.
அதேபோன்று நாமும் சிவபெருமானைச் சரண் அடைந்து சந்திர மௌலீஸ்வரராக அவரை வழிபட்டால் நம் மனதில் உள்ள துன்பங்கள் நீங்கி எப்போதும் இளமையும் மகிழ்ச்சியையும் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. அதிலும் கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளிலில் சிவ வழிபாடு செய்தால் வாழ்வில் சகல குறைகளும் நீங்கும் என்கிறார்கள்.
கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் நடைபெறும் வழிபாடுகளில் முக்கியமானது சிவபெருமானுக்குச் செய்யப்படும் சங்காபிஷேகம். 108 அல்லது 1008 சங்குகளில் தீர்த்தம் நிரப்பி சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் மிகவும் புண்ணியம் என்கின்றன ஞானநூல்கள். பக்தர்கள் சங்காபிஷேகத்தை தரிசனம் செய்தாலே கடன் தொல்லைகள் நீங்கும். கஷ்டங்கள் விலகும் என்கிறார்கள். எனவே இந்த மாதத்தில் வரும் நான்கு திங்கட்கிழமைகளில் ஏதேனும் ஒரு திங்கட்கிழமையாவது சங்காபிஷேகம் நடைபெறும் சிவாலயத்துக்குச் சென்று சிவதரிசனம் செய்யுங்கள்.
சோகங்கள் தீர்க்கும் சோமவார பிரதோஷம்
இந்த மாதம் வரும் இரண்டு பிரதோஷ தினங்களும் திங்கட்கிழமைகளிலேயே வருகின்றன. எனவே இந்த மாத பிரதோஷ தினங்கள் சிறப்பு மிக்கவை என்று போற்றப்படுகின்றன. சோமவார பிரதோஷ தினத்தில் பிரதோஷ வேளையில் நந்தி தரிசனம் செய்வது மிகவும் சிறப்பு. பிரதோஷ வேளையில் நந்திக்குச் செய்யும் அபிஷேகத்தை தரிசனம் செய்து வேண்டிக்கொண்டால் நம் வாழ்வில் கஷ்டங்கள் எல்லாம் தீரும் என்கிறார்கள்.
நந்தி பகவானுக்குக் காப்பரிசி அல்லது வெல்லத்தில் செய்த ஏதேனும் ஒரு பிரசாதத்தை சிறிதளவேனும் நிவேதனம் செய்தால் நம் துன்பங்கள் நீங்கி இன்பம் பிறக்கும் என்பது நம்பிக்கை. எனவே தவறாமல் இன்றும் 5.12.2022 தினத்திலும் சிவபெருமானை பிரதோஷ நாளில் தரிசனம் செய்து நந்தி அபிஷேகத்தைக் கண்ணுற்று, காப்பரிசி நிவேதனம் செய்தால் நம் கஷ்டங்கள் தீரும், வாழில் நிம்மதி பிறக்கும் என்கிறார்கள் பெரியோர்கள்.